கடந்த 30 வருடங்களாக உயர்கல்வித்துறையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் புத்திஜீவிகளுடன் உயர்கல்வி முறையில் மாற்றங்கள் குறித்து கலந்துரையாடி வருவதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;.
20222ஃ2023 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 263000 மாணவர்களில் 62 வீதம் அதாவது, 84000 பேர் சித்தியடைந்துள்ளதாகவும் அவர்களில் 43101 பேர் பல்கலைக்கழக வாய்ப்புக்களை பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்…
பட்டப்படிப்புகளை மறுசீரமைக்க வேண்டும். இதன்படி கலைத்துறை படிக்கும் மாணவர்கள் வேறு பாடப்பிரிவை படிக்க வாய்ப்பு கிடைக்கும். உலகின் தற்போதைய தேவைக்கு ஏற்றவாறு உயர்கல்வி முறைகள் மாற்றப்பட வேண்டும் என்றும்; சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மருத்துவப் பட்டத்திற்கு மாத்திரம், அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்த அவர், மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் மருத்துவத் துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை மாற்ற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பெருமளவானோர் இருப்பதனால், ஒரு துணைவேந்தரால் இந்தப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் இடையூறு காணப்படுகிறது. அதனால் மேலுமொரு துணைவேந்தர் பதவியை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்;.
அத்துடன், இம்முறை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியதன் பிரகாரம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சிறந்த சேவையொன்றை ஆற்றிவருவதுடன், இந்த ஆண்டு புதிய கல்வி ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான உரிய வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் பகிடிவதை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், பல்கலைக்கழகங்களில் பகிடிவதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் பகிடிவதை அல்லது வன்முறைகளுக்கு முகங்கொடுக்குமேயாயின், 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 076-5453454 என்ற இலக்கத்திற்கோ வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார். இந்த தொலைபேசி இலக்கங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், இதற்காக 3000க்கும் மேற்பட்டோர் பணியாற்ற தயாராக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.