கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (58). இவர் கடந்த மாதம் 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் அவரது கழுத்தில் இருந்த, நான்கு சவரன் தங்க செயினை பறித்துச்சென்றனர்.

அதேபோல பொள்ளாச்சி கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்தவர் அம்சவேணி (32). இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, புதிய கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் இரண்டு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
அடுத்தடுத்த நடந்த செயின் பறிப்பு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இரண்டு பெண்களும் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகாரளித்தனர். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பெண்களிடமும் நகைப்பறிப்பில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.
இவர் முன்பு பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றியுள்ளார். கடைசியாக செட்டிப்பாளையம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவியும் காவலர் என்பது தெரியவந்துள்ளது.

சபரிகிரியை கைது செய்த போலீஸ், அவரிடம் இருந்து 7.5 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டுக்கு அவர் புதிதாக வாங்கிய புல்லட் பைக்கை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “சபரி பணியாற்றிய பல இடங்களில் அவர் மீது புகார்கள் உள்ளன. செட்டிப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சிறப்புப் பிரிவுக்கு அவர் பணியிடம் மாற்றப்பட்டிருந்தார். செட்டிப்பாளையத்தில் இருந்து வருகிற வழியில் கூட அவர் ஒரு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பொள்ளாச்சியில் அவர் மொத்தம் 4 செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றில் 2 தோல்வியில் முடிந்தது. ஒரு கவரிங் செயினையும் பறித்துள்ளார்.

இதுகுறித்து சபரியிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு சிசிடிவியில் அவர் ஹெல்மெட்டில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து சபரி தான் என்பதை உறுதிப்படுத்தினோம். ஒருகட்டத்தில் சபரியும் ஒப்புக்கொண்டார். சபரிக்கு மாக்கினாம்பட்டியில் 2 மாடியில் ஒரு பெரிய வீடு உள்ளது. அவரிடம் புல்லட் பைக் மற்றும் ஷிஃப்ட் காரும் உள்ளது.” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY