“ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன்” – பாஜகவுக்கு ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார்.” என்று ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு ஜார்க்கண்ட் முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றுக் கொண்டுள்ளதை அடுத்து ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சம்பய் சோரனுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் தேவை.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சட்டசபைக்கு வந்தார் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். அப்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் தீர்மானத்தின் மீது பேசிய ஹேமந்த் சோரன், “ஜனவரி 31 இரவு, நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில முதல்வர் கைது செய்யப்பட்டார். எனது கைது சம்பவத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு உள்ளதாக நான் நினைக்கிறேன்.

நான் கைது செய்யப்பட்ட ஜன.31ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாக நினைவுகூரப்படும். என் மீதான குற்றச்சாட்டை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்க வேண்டும். பாஜகவுக்கு தைரியம் இருந்தால் என் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தின் ஆவணங்களை காண்பிக்கட்டும். சவால் விடுக்கிறேன். அப்படி நிரூபித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆம், என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கொடுத்தால் அரசியலில் இருந்தே விலகத் தயார். ஜார்கண்டில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது. பழங்குடியினரை மத்திய அரசு ஏன் இவ்வளவு வெறுக்கிறது என்பது தெரியவில்லை.” இவ்வாறு பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.