பணம் கேட்டு தினமும் அடி, உதை : முனீஸ்ராஜாவால் என் மகள் அனுபவித்த சித்ரவதை – ராஜ்கிரண் வேதனை

நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரணை எதிர்த்து இவர்களின் திருமணம் நடந்தது. இதனால் அப்பா – மகள் இடையே அப்போது பிரச்னை எழுந்தது.

சிலதினங்களுக்கு முன் பிரியா வெளியிட்ட வீடியோவில், ‛‛நானும், முனீஸ்ராஜாவும் பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என தெரிவித்திருந்தார்.

பிரியாவின் இந்த வீடியோவிற்கு பதிலளித்துள்ள முனீஸ்ராஜா, இதன் பின்னணியில் யார் இருப்பார் என உங்களுக்கே தெரியும் என ராஜ்கிரண் பெயரை சொல்லாமல் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

இந்த விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரணை தொடர்பு கொண்டு கேட்டபோது, தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி : ‛‛பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ்ராஜா மற்றும் அவனது குடும்பத்தாரின் வேலை. இதற்காக கொல்லிமலை பக்கம் போய் வசியம் செய்யப்பட்ட மருந்து வாங்கி அதை சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைத்துவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் சொல்வதையே அந்த பெண்களையும் கேட்க வைத்து விடுவார்கள். இப்படி ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பமே பணம் பறித்துள்ளது. இது தான் அவர்களின் வேலை.

இதையெல்லாம் தெரியாமல் என் பொண்ணு போய் மாட்டிக் கொண்டது. அந்த பையனை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. இப்போ என் பெண்ணை நான் தான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்து கொள்கிறேன். என் பெண்ணுடன் வாழணும் நினைப்பவன் பெண்ணை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு பணம் வாங்கிட்டு வா என டார்ச்சர் செய்வது, அடிப்பது என்று இருந்துள்ளான்.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என் எதிர்ப்பை மீறி திருமணம் செய்றீங்க. ஒரு வருடம் நல்லபடியா உன்ன வச்சு அவன் வாழ்ந்தான் என்றால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் இல்லையென்றால் என் முகத்தில் முழிக்காதே என்றேன். அவன் நல்லபடியாக வாழ வைக்கவில்லை. ஆறேழு மாதத்தில் என் மகள் பிரிந்து வந்துவிட்டார்.

முனீஸ்ராஜாதினமும் குடித்துவிட்டு அடிப்பது, கொடுமைப்படுத்துவது என எல்லா டார்ச்சரும் செய்துள்ளான். அவன் மட்டுமல்ல அவன் குடும்பமே இதற்கு உடந்தை. தினமும் குடித்துவிட்டு வந்து அடித்ததால் உடல்ரீதியாக என் மகள் பாதிக்கப்பட்டார். இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு சித்ரவதை அனுபவித்துள்ளார். இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது. பின்னர் வேறு ஒருவர் மூலம் தெரியவர ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன்.

பிரிந்து வந்த பின்னர் முனீஸ்ராஜா மீண்டும் என் மகளுடன் வாழ பேசி உள்ளார். ஏற்கனவே முனீஸ்ராஜா நிறைய திருமணம் செய்துள்ளான். அந்த விஷயம் எல்லாம் என் மகளுக்கு தெரியவர அவர் தெளிவாக பதில் அளித்துவிட்டார். தற்போது என் மகள் மன ரீதியாகவும் பாதிப்பில் உள்ளார். சிகிச்சை எடுத்து வருகிறார்.

இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.