மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் இன்று போராட்டம்

பெங்களூரு: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கர்நாடகாவுக்கு போதிய நிதி ஒதுக்கீடு மற்றும் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரி விநியோகத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது. அதிக வரியை வழங்கும் கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குறைவாக வரி வழங்கும் வட‌ இந்திய மாநிலங்களுக்கு நிதியை வாரி வழங்கியுள்ளது. வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசு தென்னிந்திய மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. ​​

உதாரணமாக, உத்தர பிரதேசத்துக்கு சுமார் ரூ.2.18 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ​கர்நாடகாவுக்கு ரூ.44,485 கோடி மட்டுமே வழங்கியுள்ளது. கர்நாடகாவை எதிரி மாநிலமாக மத்திய அரசு நினைக்கிறது. இதை கண்டித்து கன்னடர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து புதன்கிழமை (7-ம் தேதி) டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் எனது தலைமையில் ‘டெல்லி சலோ’ போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் கர்நாடகாவை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்க வேண்டும். பாஜக, மஜத தலைவர்களும், அக்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நிறுத்தும் வகையில் தென் மாநிலங்களின் பொருளாதாரக் கூட்டணி அமைக்க முடிவெடுத்துள்ளோம். வட இந்திய மாநிலங்களுக்கு சமமான வளங்களை தென்னிந்திய மாநிலங்களுக்கும் வழங்க வலியுறுத்துவதே இதன் நோக்கமாகும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.