நில மோசடி வழக்கு: லாலு பிரசாத்தின் மனைவி மற்றும் மகள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

புதுடெல்லி,

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ். இவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அரசில் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது ரெயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் ‘குரூப் டி’ பணிகளில் பலர் நியமிக்கப்பட்டனர்.

2004-09 காலகட்டத்தில் இவ்வாறு நியமனம் பெற்றவர்கள், அதற்கு பதிலாக அவர்களது நிலங்களை லாலு பிரசாத்தின் குடும்பத்தினருக்கு மாற்றம் செய்து கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், மகள்கள் மிசா பாரதி எம்.பி., சந்தா, ராகிணி ஆகியோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பாக மூவரும் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பியது. நீதிமன்ற சம்மனைத் தொடர்ந்து ராப்ரி தேவி, மிசா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர். விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில், ஏன் நீதிமன்ற காவல் தேவை என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை இடைகால ஜாமீன் வழங்கி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.