இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை (08) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனம் ஆகியன ஊடாக பாராளுமன்றத்துக்கு வழங்கிவரும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நன்றிகளைத் தெரிவித்தார். விசேடமாக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியம், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், பாராளுமன்ற ஆய்வுப் பிரிவின் சேவைகள் மற்றும் பொது வெளிக்கள பணிகளுக்கு வழங்கும் உதவிகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் புதிய பாராளுமன்றக் கூட்டத்தொடரொன்று ஆரம்பிக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றி ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்கள் கேட்டறிந்தார். அதற்கமைய அரசாங்க சட்டமூலங்கள், தனியார் சட்டமூலங்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான எதிர்கால நடைமுறைகள் பற்றி சபாநாயகர் விளக்கமளித்தார்.
இதேவேளை, சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஜனநாயக ஆட்சியின் தூணாக பாராளுமன்றம் மேற்கொள்ளும் முக்கியமான பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் ஜனநாயகம், மனித உரிமைகள், முதலீடு, பாதுகாப்பு போன்ற துறைகளில் தொடர்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.