ராஜ்கோட் டெஸ்ட், IND vs ENG: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. விராட் கோலி அ்டுத்த மூன்று போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார். அதேசமயம் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் காயத்தில் இருந்து அணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் அவர்கள் இன்னும் முழு உடல் தகுதியை எட்டிவிடவில்லை. போட்டி தொடங்கும் அன்றைய நாளில் அவர்கள் உடல்குதியை எட்டியிருந்தால் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள்.
அதனால் அவர்கள் இருவரும் விளையாடுவது குறித்து சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் காயம் காரணமாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் பிளேயிங் லெவனில் யார் சேர்ப்பது என்பது குறித்து ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
ராஜ்கோட் மைதானம் விசாகப்பட்டினம் மைதானத்தைப் போன்றே இருக்கும் என்பதால் பெரிய மாற்றங்கள் எல்லாம் பிளேயிங் லெவனில் இருக்காது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிளேயர்களே இப்போட்டியிலும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ராகுல் மற்றும் ஜடேஜாவின் வருகை மட்டுமே அணிக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் இல்லாதபட்சத்தில் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்பிராஸ் கான், வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோர் களமிறங்கவும் வாய்ப்பு இருக்கிறது. ரஜத் படிதார் அணியில் இருந்து நீக்கப்பட்டால் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முகேஷ்குமாரின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் சிராஜ் மீண்டும் அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்திய அணி தயாராகவே இருக்கிறது என்பதால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் ராஜ்கோட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை பார்க்கலாம்.
ராஜ்கோட் டெஸ்டில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார்/சர்பராஸ் கான், கேஎல் ராகுல் (தகுதி இருந்தால்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல்/ரவீந்திரன் ஜடேஜா (தகுதி இருந்தால்), குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.