இந்திய அணிக்கு நிம்மதி… இந்த இங்கிலாந்து வீரர் விளையாட மாட்டார் – காரணம் இதுதான்!

IND vs ENG 3rd Test: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

தொடர்ந்து, மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் வரும் பிப். 15ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, ராஞ்சி மற்றும் தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் 4 மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. முதலிரண்டு போட்டிகளுக்கு மட்டுமே முதலில் ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மூன்று போட்டிகளுக்கான ஸ்குவாட் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. 

இந்த ஸ்குவாடில் விராட் கோலி இடம்பெறவில்லை. முதலிரண்டு போட்டிகளை போலவே தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியிருந்த நிலையில், அதேபோல் மீதம் உள்ள மூன்று டெஸ்டிலும் அவர் பங்கேற்கவில்லை என பிசிசிஐ அறிவித்தது. கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோரின் ஸ்குவாடில் இருந்தாலும் அவர்களின் உடற்தகுதி இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் நீடிக்கின்றனர். ஆவேஷ் கானிற்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, ஷ்ரேயாஸ் ஐயரை அணியில் இருந்து நீக்கியது பெரிதும் பேசப்பட்டது. மிடில் ஆர்டரில் விராட் கோலி, ரஹானே, புஜாரா என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க பும்ரா இந்த மூன்றாவது போட்டியில் மட்டும் ஓய்வில் இருப்பார் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் போட்டிகளில் விளையாடிக்கொண்டே வருவதால், அவரின் வேலைப்பளு நிர்வாகத்தை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. அதேபோல், விக்கெட் கீப்பர் பேட்டரான கேஎஸ் பரத்திற்கு பதிலாக துருவ் ஜூரேல் விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், 2ஆவது போட்டியில் தோல்வியடைந்திருந்தாலும் இங்கிலாந்து முகாம் மிக நிதானமாக தென்படுகிறது. அந்த அணியில் அனைவரும் சரியான காம்பினேஷனில் உள்ளதால் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 

எனினும், முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ஜாக் லீச் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. இங்கிலாந்தை பொறுத்தவரை பந்துவீச்சு மட்டுமே சற்று கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. லீச் அனுபவம் வாய்ந்த வீரர் என்பதால் அவர் கடந்த போட்டியில் இல்லாதது மேலும் அவர்களை பலவீனமடைய செய்தது. 

அந்த வகையில் மூன்றாவது போட்டியிலும் ஜாக் லீச் இடம்பெற மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிலையில், ஜாக் லீச் அங்கிருந்து நாடு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் மற்றும் சோமர்செட் கவுண்டி அணி நிர்வாகத்தின் கீழ் சிகிச்சையில் உள்ளார். இங்கிலாந்து அணி அவருக்கான மாற்று வீரரை அறிவிக்க விரும்பவில்லை எனவும் அதே அணியோடு தொடர்வதாகவும் அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.