நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (13) தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், அண்மையில் மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இந்நாட்டு மக்களை போதையிலிருந்து பாதுகாத்து அவர்கள் அச்சம்; மற்றும் சந்தேகம் இல்லாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான சிறந்த சூழலை உருவாக்கும் நோக்கில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் டெரான் அலஸின் தலையீட்டில், ‘யுக்திய’ எனும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.