`காங்கிரஸிலிருந்து யாரும் என்னை வெளியேற சொல்லவில்லை'- பாஜகவில் இணைந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். ஏற்கெனவே மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்களான மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் ஆகியோர் காங்கிரஸ் கட்சியிலிருந்து சமீபத்தில்தான் விலகினர். அவர்கள் இருவரும் இரு வேறு கட்சிகளில் சேர்ந்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய அசோக் சவான், தான் பா.ஜ.க-வில் சேருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இரண்டு நாள்களில் முடிவு செய்வேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் சொன்ன அடுத்த நாளே, அதாவது இன்றே பா.ஜ.க தலைவர்களைச் சந்தித்து அசோக் சவான் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார்.

அசோக் சவான்

துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, மும்பை காங்கிரஸ் தலைவர் அசிஷ் ஷெலார் முன்னிலையில் அசோக் சவான் தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். இதில் பேசிய அசோக் சவான், மும்பை பா.ஜ.க தலைவர் அசிஷ் ஷெலாரை, மும்பை காங்கிரஸ் தலைவர் என்று குறிப்பிட்டார். தவறை பட்னாவிஸ் சுட்டிக்காட்டியவுடன், தவறுக்கு வருத்தம் தெரிவித்த அசோக் சவான், தான் இப்போதுதான் கட்சியில் சேர்ந்து இருப்பதால் இத்தவறு நடந்துவிட்டது என்று குறிப்பிட்டார். அதோடு பா.ஜ.க.வில் தான் புதிய பயணத்தை தொடங்கி இருப்பதாகவும், தான் எப்போதும் நேர்மறையான அரசியலையே செய்து வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பா.ஜ.க-வில் சேர எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. கட்சி என்ன சொல்கிறதோ, அதை செய்வேன். யாரும் என்னை காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறும் படி சொல்லவில்லை. நானே சுயமாக இம்முடிவை எடுத்தேன்” என்றார். அவருடன் சட்ட மேலவை உறுப்பினர் அமர் ரஜுர்கரும் பா.ஜ.க-வில் சேர்ந்தார். நாளை அசோக் சவான் ராஜ்ய சபா தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிட்டார்.

மூத்த தலைவரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கட்சிக்கு தெரியும் என்றும் பட்னாவிஸ் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியில் 38 ஆண்டுகள் இருந்த அசோக் சவான், முதல்வர் பதவி உட்பட அனைத்து விதமான பதவிகளையும் வகித்துவிட்டார். பா.ஜ.க-வில் சேருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்புகூட சோனியா காந்தியை சந்தித்து பேசியதாக தெரிகிறது. பா.ஜ.க-விலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஏக்நாத் கட்சேயும் மீண்டும் பா.ஜ.க-வில் சேர முயன்று வருகிறார். ஆனால் பா.ஜ.க தலைமை இன்னும் அதற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பிற கட்சிகளில் இருந்து முக்கியத் தலைவர்களை பா.ஜ.க.விற்கு இழுக்கும்படி, மாநில கட்சி தலைவர்களுக்கு பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.