அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக மேற்கொள்ளப்படும் சேவைகள், பயணிகள் அல்லது பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்திற்கான பொது மற்றும் புகையிரதப் போக்குவரத்து ஆகிய சேவைகளை வழங்குதல் மற்றும் நடைமுறைப்படுத்தல், தபால் சேவை போன்றவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (13) வெளியிடப்பட்டுள்ளது. .
1979 ஆம் ஆண்டு 61 இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு இணங்க ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இவ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்க கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் என்பன வழங்கும் சேவைகளை பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக அத்தியாவசியமானவை என்றும், அச்சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இவ் வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வைத்தியசாலைகளில், வைத்திய நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களில் நோயாளிகளை பராமரித்தல், வரவேற்றல், பாதுகாப்பு, சிகிச்சை போன்றவற்றுடன் தொடர்புடைய சகல அவசிய சேவைகளையும் வழங்குதல், வேலை மற்றும் அத்தியாவசிய சேவைப் பயனாளிகளுக்காக இவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப் படுவதாக அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்காக வழங்கப்படும் பணிகள் அத்தியவசிய சேவைகளாக தீர்மானிக்கப்பட்டு இவ்அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.