`2-ஜி வழக்கு; அண்ணாமலை 6,000 டேப்கள் வேண்டுமானாலும் வெளியிடட்டும்!' – ஆ.ராசா காட்டம்

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்… பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்’ என்ற தலைப்பில் கரூர் மக்களவைத் தொகுதி பரப்புரைக் கூட்டம், கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“அவசர நிலையில், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படும்போது ஆட்சி பெரிதல்ல என அவசர நிலையை எதிர்த்தவர் கருணாநிதி. கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி பொய் வழக்கில் சிறையில் இருக்கிறார். விரைவில் அவர் வெளியே வருவார். சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரையை கிழிப்பார். 20, 25 ஆண்டுகளுக்கு மேல் மக்களவையில் இருக்கிறேன். மக்களவை நடக்கும்போது எந்த பிரதமரும் வெளிநாட்டுக்குச் செல்லமாட்டார்கள். அதுதான் மரபு. ஏனென்றால் சட்டங்கள், திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது எல்லா பிரதமர்களும் இருப்பார்கள். கேள்வி நேரத்தில் மக்களவைக்கு வராத ஒரே பிரதமர் மோடிதான். இது, அருவருக்கத்தக்க அயோக்கியத்தனம்.

கூட்டத்தில் பேசும் ஆ.ராசா

தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு, செயல்படுத்தப்படும் திட்டங்கள், பாதுகாப்புகள் குறித்துதான் உரையாற்றுவார்கள். ஆனால் மோடி, காங்கிரஸைக் குறைகூறுகிறார். 3-ம் தர அரசியல்வாதிக்கூட இப்படிப் பேசமாட்டார். இவரிடம் உண்மையும், சத்தியமும் இல்லை. ஜனநாயக நாட்டில் புகார்கள் தெரிவித்தால், பதிலளிக்கவேண்டும். என்மீது ரூ.1.26 லட்சம் கோடி ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. நான் என்ன ஓடி, ஒளிந்துவிட்டேனா… அதானி மீது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டியதாக ஊழல் முறைகேடு தொடர்பாக ஹிண்டர்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதானி ஊழல் முறைகேடு குறித்து கேட்டால், மோடி அமைதி காக்கிறார். பதில் தருவதில்லை. மோடி ஒரு கோழை. மீண்டும் ஒரு கோழையை ஆட்சிக்கு வரவிடக் கூடாது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6,500 கோடி பா.ஜ.க பெற்றுள்ளது. நிதி தருபவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்பது அயோக்கியத்தனமானது. தற்போது நீதிமன்றம் அதனைத் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

அப்படித் தெரிவித்தால் அதில் அதானி ரூ.500 கோடி அல்லது ரூ.1,000 கோடி வழங்கியிருந்தால், அது லஞ்சப் பணம் தானே… அப்போது சட்டப்படி சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்படி நடந்தால் அதை செய்ய வைப்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினாகத்தான் இருக்கும். 2-ஜி வழக்கு ரூ.1.26 லட்சம் கோடி குறித்து அண்ணாமலை 6-வது டேப் வெளியிடப் போவதாக கூறியுள்ளார். அவர் 6,000 டேப் வேண்டுமானாலும் வெளியிடட்டடும். இந்திய குடியுரிமைச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் என்கின்றனர். என்னிடமே பிறப்பு சான்றிதழ் இல்லை. அப்படியென்றால், நானே அகதிதான். தீவிரவாதிகள்மீது, தவறு செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள். முஸ்லிம்களை 2-ம் தர குடிமக்களாகக்கூட கருதாமல் அடிமைகள்ப்போல நடத்தாதீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தேசியக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்கிறார். ஆனால், இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்கிறார்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அ.தி.மு.க வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்று ஒன்றிரண்டு சீட்டோ அல்லது அதற்கு மேல் சீட்டுகளோ வந்து விட்டால், மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டேன் என அவர் கூற முடியுமா… அப்படிக் கூறினால் 3 பேர் உள்ளே செல்வீர்கள். இ.டி, ஐ.டி, சி.பி.ஐ-க்கு தி.மு.க பயப்படாது. கமல்நாத் காங்கிரஸில் செல்வாக்கு மிக்கவர். 80 வயதைக் கடந்தவர். தன்மீது வழக்குப்போட்டுக் கொன்றுவிடுவார்கள் என அஞ்சுகிறார். இ.டி, ஐ.டி, சி.பி.ஐ-யை வைத்து அடிமைப்படுத்துகிறார்கள். தனி மனித தவறுகளை திருத்தி விடலாம். ஆனால், மோடி தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களை தவறிழைக்க வைக்கிறார். ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் மதவாதம் என சர்வாதிகாரப் போக்கோடு நடந்து கொள்கிறார். பொய், மோசடி, லஞ்சம், ஊழல், மதவெறி ஆகியவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது. மோடியை எதிர்க்க வடஇந்திய தலைவர்கள் அஞ்சுகின்றனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் அவரை தைரியமாக எதிர்க்கிறார். மோடியை கட்டாயம் வீழ்த்துவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.