கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி சின்னதாராபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை 100-வது நாள் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்துகொண்டார். பொதுமக்களிடையே உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இன்றைய ‘என் மண், என் மக்கள்’ பயணம், நூறாவது நாளாக, 225 – ஆவது சட்டமன்றத் தொகுதியாக, நான் பிறந்து வளர்ந்த மண்ணான, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், உற்சாக வரவேற்புடன் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்ற முதல் யாத்திரை நமது என் மண் என் மக்கள் யாத்திரை தான். தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்றதில் அறிந்து கொண்ட உண்மை, தமிழக மக்கள் அரசியலில் நேர்மையான மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது பயணத்தின் 234 ஆவது தொகுதி நிறைவு விழா, வரும் பிப்ரவரி 27 – ம் தேதியன்று, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில் நடைபெறவிருக்கிறது. நமது பாரதப் பிரதமர் அந்த மாபெரும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார். பிற மாநிலங்களை விட தமிழகத்துக்கு நமது பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். தமிழக அரசியல் நேர்மையாக இருந்த காலத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த, அரசியல் அனுபவம் வாய்ந்த, தலைவர்கள் அனைவரும் இன்று பா.ஜ.-கவில் இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி பா.ஜ.க-வால் மட்டும்தான் தர முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள். கடந்த 1984 – ம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த பா.ஜ.க, இன்று 303 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு, தனிப் பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.
தொகுதி அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது பண மோசடி வழக்கில் 280 நாட்களாக சிறையில் இருக்கிறார். இத்தனை நாட்களாக, துறை இல்லாத அமைச்சராக மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்ற அவர், இப்போதுதான் ஜாமீன் கிடைப்பதற்காக பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது தம்பி 280 நாள்களாகத் தலைமறைவாக இருக்கிறார்.

2024 முதல் 2026 வரை பா.ஜ.க-வின் ஆட்சியைப் பார்த்துவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுங்கள்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகிவிட்டது. ஒவ்வொரு தமிழரும் மோடி அவர்கள் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். நாட்டின் வளர்ச்சி மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி நடைபெறுகிறது.

பிரதமர் அமைச்சரவையில் உள்ள 75 அமைச்சர்களில் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. தமிழகத்திலும், நாடு முழுவதும், ஊழல் இல்லாத, குடும்ப ஆட்சி இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று நமது பிரதமர் விரும்புகிறார்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY