“இதனால தான் உடம்பு முடியாத சூழலிலும் திருக்குறள் பேசி வீடியோ போட்டேன்!" – `அருவி' திவ்யா

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `அருவி’. இந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருப்பவர் திவ்யா. தொகுப்பாளினியாக ஏற்கெனவே பரிச்சயமானவர் தற்போது தொடரில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

திவ்யா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருக்குறள் கூறி அந்தக் குறளின் விளக்கத்தையும் எளிமையாக மக்களுக்கு புரியும்படி ரீல்ஸாகப் பதிவிட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் 1330 திருக்குறளையும் கூறியிருக்கிறார். அவரிடம் இது குறித்துப் பேசினோம்.

திவ்யா

“எனக்கு திருக்குறள் மனப்பாடமா தெரியும். நல்ல விஷயங்கள் மக்கள்கிட்ட சென்று சேரணும் அந்த மாதிரி நாம ஏதாவது ஒரு விஷயத்தை முன்னெடுக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். திருக்குறள் ரொம்பவே எளிய முறையில் தான் இருக்கும். ஆனாலும், நாம எல்லாரும் அத்தனை குறளையும் படிச்சதும் இல்ல, அந்தக் குறளுக்கான அர்த்தத்தைத் தெரிஞ்சிக்கிட்டதும் இல்ல. படிக்கும்போது பத்து குறளை மனப்பாடம் செய்வோம். அதையும் படிச்சு முடிச்சதும் மறந்திடுவோம். அதனால தமிழையும், திருக்குறளையும் கொண்டு சேர்க்கணும்னு முடிவெடுத்தேன். இன்னைக்கு ஒரு விஷயம் மக்களுக்கு நேரடியா சென்று சேர சோஷியல் மீடியா தான் மிகப்பெரிய ஆயுதம். அதுலேயே திருக்குறளும், விளக்கமும் சொல்லி ஒரு நிமிட ரீல்ஸ் ஆக பதிவிட முடிவெடுத்தேன். 

`சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்’

என்கிற குறளின் அடிப்படையில் சொல்றது ரொம்ப சுலபம் அதன்படி செயல்முறைப் படுத்துவது தான் கடினம் அதனால ஒருநாள் கூட திருக்குறள் பதிவிடுறதை தவறவிடக் கூடாது என்கிற முடிவோடு இந்தப் பயணத்தைத் தொடங்கினேன். இப்ப `அருவி’ சீரியலில் நடிச்சிட்டு இருக்கிறேன். 10,15 நாள்கிட்ட அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக போயிட்டேன். அங்கே ஷூட்டிங் இடைவேளையில் திருக்குறள் பேசி அங்கயும் மிஸ் பண்ணாம அப்லோட் பண்ணிட்டேன்!’ என்றவர் கொரோனா தொற்று வந்த போதிலும் திருக்குறள் பேசியது குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

திவ்யா

`கோவிட் சமயத்தில்தான் இதை ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல எனக்கும் கொரோனா வந்து வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக்கிட்டேன். அம்மாவையும் அக்கா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு நான் தனியா தான் இருந்தேன். பேசவே முடியாத அளவுக்கு இருமல் இருந்துச்சு. இதுவரைக்கும் வீடியோவை கட் பண்ணி எடிட் பண்ணியெல்லாம் அப்லோடு பண்ணதில்லை. ஆரம்பிச்சா கடகடன்னு பேசிடுவேன். அன்னைக்கு ஒரு நிமிட ரீல்ஸூக்காக அரை மணி நேரத்துக்கு மேல செலவிட்டேன். உடம்பு ஒத்துழைக்காம ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனாலும், ஒருநாள் கூட தவறவிடக் கூடாது என்கிற உறுதியில் வீடியோ பதிவு பண்ணேன்.

அதே மாதிரி மிக்ஜாம் புயல் வந்தப்ப எங்க வீடு முழுக்க தண்ணீர் வந்து மாடியில் தான் இருந்தோம். அப்ப வீடியோ எடுத்துட்டேன் ஆனா அதை அப்லோடு பண்றதுக்கு எனக்கு நெட் கனெக்‌ஷன் இல்ல. எப்பவும் காலையில் வீடியோ பதிவு பண்ணிடுவேன் ஆனா அன்னைக்கு சாயங்காலம் தான் பதிவிட முடிஞ்சது. அதுவே டைமிங் மிஸ் ஆகிடுச்சேன்னு ரொம்ப மன வருத்தத்தை கொடுத்துச்சு!’ என்றவர் தொடர்ந்து பேசினார்.

திவ்யா

`விவேக் சார் உட்பட பல பிரபலங்கள் என்னுடைய இந்த முயற்சிக்காக என்னை பாராட்டியிருக்காங்க. அதெல்லாம் தான் இன்னமும் தமிழ் சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து பண்ணனுங்கிற எண்ணத்தை உருவாக்குது. உரைஞரும், கவிஞருமான மூவேந்திர பாண்டியன் என்பவர் தமிழ் சார்ந்து நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்கார். அவர் எனக்கு `திருக்குறள் திருச்செல்வி’ என்கிற பட்டம் வழங்கி என்னை கெளரவித்திருக்கிறார்!’ என்றதும் அடுத்தகட்ட திட்டம் குறித்துக் கேட்டோம்.

`எனக்கு நாலடியாரும் தெரியும். ஆனா, நான் புத்தகங்கள் வாங்கியெல்லாம் நாலடியார் படிக்கல. அதனால நாலடியாரையும் மக்களுக்கு எளிய முறையில் சொல்லணும்னு அதுக்கான நோட்ஸ் எடுத்துட்டு இருக்கேன். அதனால இப்ப பத்து நாட்கள் அதுக்காக பிரேக் எடுத்திருக்கேன். அதன் பிறகு நாலடியாரையும் தொடர்ந்து பதிவிடுவேன்!’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.