விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் 446 ட்ரோன்கள்; 500 பேருக்கு பயிற்சி: மத்திய அரசுடன் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் வழங்கல்

சென்னை: வேளாண் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் மத்திய அரசின் ‘நமோ ட்ரோன் திதி’ திட்டத்துக்காக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் 446 ட்ரோன்களும், 500 பேருக்கு இலவச ட்ரோன் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை விசாரணை அதிகாரி ஷ்யாம்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: ஒரு வலுவான மற்றும் வளர்ந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பெண்களுக்கு அதிகாரமளித்தல் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண்கள் பொருளாதார ரீதியாகமுன்னேறும்போது, ​​கிராமப்புறவளர்ச்சிக்கு பெரிதும் பங்களிக்கின்றனர். இதையொட்டியே புது முயற்சியாக ‘நமோ ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தை கடந்தஆண்டு பிரதமர் மோடிஅறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு 15,000 ட்ரோன்கள் அடுத்த 3 ஆண்டுகளில் மானியம் மூலம் வழங்கப்பட உள்ளன. இது கிராமப்புற பெண்களை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்திக் கொள்ள உதவும். இதன் முதற்கட்டமாக நடப்பாண்டு மார்ச் 11-ம் தேதி (நாளை) நாடு முழுவதும்1000 ட்ரோன்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்துக்காக மத்திய அரசுடன் இணைந்து கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், 446 ட்ரோன்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ள 500 பெண் தொழில்முனைவோர்களுக்கு இலவசமாக ட்ரோன் பயிற்சியையும் வழங்கி இருக்கிறோம்.

ட்ரோன் பயிற்சியில் அக்ரி ட்ரோன்கள் (வேளாண்) மூலமாகஉரம் தெளித்தல், வேளாண் ரசாயனங்களைப் பயன்படுத்துதல், நீர்ப்பாசன மேலாண்மை உள்ளிட்டவை குறித்து முறையாகப் பயிற்சிஅளிக்கப்பட்டு, ட்ரோன் பைலட் உரிமமும் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய ரசாயனங்கள் மற்றும்உரத்துறை அமைச்சகம் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர்களுக்கு ஒரு வாரம் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க 10-ம் வகுப்புமுடித்திருந்தால் போதும். கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதில், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்றுவரும் மேரி என்பவர் கூறும்போது, “இந்த பயிற்சியில் ட்ரோனை கையாள்வது, தொழில்நுட்பத்தை எளிதாக எவ்வாறு எதிர்கொள்வது போன்றவை கற்றுத்தரப்பட்டன. தற்போது தைரியமாக நாங்களும் தொழில்நுட்பத்தைக் கையாள முடியும். மேலும், என் குடும்பத்தை என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.