வேலூர் மக்களவைத் தொகுதியில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டிருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, ‘‘தி.மு.க-வில் பிரசாரம் செய்ய யாருமில்லை. கமல்ஹாசன் போன்ற முகம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் போனாலும் கூட்டம் வராது. கூட்டத்துக்காக கமல்ஹாசன் வேண்டும். எங்கள் கதவுத் திறந்திருக்கிறது. யார் வேண்டுமானாலும் எங்களுடன் வரலாம்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் வேறு கட்சிகளில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைகிறார்கள். காரணம், மோடி மீது அவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை. நம் நாடு கடைசி ஐந்தாவது இடத்தில் இருந்து டாப் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. கடந்த 65-வது ஆண்டுகளாக காங்கிரஸால் சாதிக்க முடியாததை… பத்து வருடத்தில் மோடி சாதித்துக் காட்டியிருக்கிறார். இதுதான் காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையேயான வித்தியாசம்.
காங்கிரஸால் ஏன் சொந்தக் காலில் நிற்க முடியவில்லை. ஒவ்வொரு இடத்துக்குப் போனாலும் காமராசர் பெயரை வைத்துதானே பிச்சையெடுக்கிறார்கள். தி.மு.க அல்லது அ.தி.மு.க ஆகிய இரண்டிலும்தானே மாறி மாறிப் பயணம் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் 3,500 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஜாபர் சாதிக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் யாருடைய ஆள். அவர் தி.மு.க தானே.

ஒருபக்கம் முதலமைச்சர் போட்டோ, இன்னொரு பக்கம் உதயநிதி போட்டோ. தி.மு.க ஆள் என்று சொல்லிதானே ஜாபர் சாதிக் எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார். இவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?. கட்சியில் இருந்து அவரை நீக்கிவிட்டால் எல்லாமே முடிந்துபோய் விட்டதா?. தொடர்புடையவர்களின் பெயர்கள் இனிமேல்தான் வெளியே வரப் போகிறது. அதேபோல, பிரதமர் மோடியின் வருகையும் இவர்களிடம் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களிடமும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கெல்லாம் போட்டியிடுகின்றோமோ, அங்கெல்லாம் எங்கள் வெற்றி உறுதியாகிவிட்டது’’ என்றார்.