மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப்போவதாகக் கூறியிருந்தார். தற்போது, ஓய்விலிருந்து திரும்பி உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது எனத் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனியார் ஊடக விழா ஒன்றில் பேசிய சமந்தா, ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா…’ பாடலில் நடித்தது குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
“எனக்கு இந்தப் பாடலில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ‘ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன். ஏனென்றால் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது எனக்குத் தெரிந்த விஷயம் அல்ல. அதனால் நடிகையாக ஓர் அனுபவத்தைப் பெறுவதற்காக அந்தப் பாடலில் நடித்தேன்.
‘தி ஃபேமிலி மேன் 2’-ல் எப்படி ராஜி கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டு நடித்தேனோ அதேபோலத்தான் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்றியா’ பாடலிலும் நடித்தேன்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “ஒரு பெண்ணாக இருப்பதால் பல இடங்களில் சிரமங்களைச் சந்தித்திருக்கிறேன்.

நான் அழகாக இல்லை. மற்ற பெண்களைப்போல இல்லை என்று நம்பிக்கை இழந்தும் சில நேரங்களில் இருந்திருக்கிறேன். அதன் பிறகு என்னைக் கடினமான சூழ்நிலைகளில் ஈடுபடுத்தி, அவற்றைக் கடக்கப் போராடக் கற்றுக்கொண்டேன். அதுதான் நான் ஒரு நல்ல மனிதராகவும் நடிகையாகவும் வளர்வதற்குக் காரணம்” என்று கூறியிருக்கிறார்.