சீர்மரபினருக்கான ஒரே சாதி சான்றிதழ் உத்தரவு: முதல்வருக்கு துரை வைகோ  நன்றி

மதுரை: தமிழ்நாட்டில் 68 சமூகத்தை சேர்ந்த சீர்மரபினருக்கு ஒற்றை சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுகவின் முதன்மைச் செய லாளர் துரைவைகோ நன்றியை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். அப்போது, அதிமுக ஆட்சியில் நடந்த குளறுபடியால், தமிழகம் முழுவதுமுள்ள ஊராளிக் கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், பிறமலைக் கள்ளர், மறவர், அம்பலக்காரர், வலையர், தொட்டிய நாயக்கர், போயர், குறவர் உள்ளிட்ட சீர்மரபினரான 68 சமூகத்தைச் சேர்ந்த அனைவரையும், மத்திய அரசு சலுகைகளைப் பெற ‘சீர்மரபு பழங்குடியினர்’ DNTs (Denotified Tribes) எனவும், மாநில அரசு சலுகைகளைப் பெற ‘சீர்மரபு வகுப்பினர் ‘ DNCs (Denotified communities) எனவும் ‘இரட்டை சாதிச்சான்றிதழ்’ வழங்கும் முறை உள்ளது.

எனவே தமிழ்நாடு முழுவதும்இந்த 68 சமூகத்தவர்கள், சீர்மரபு பழங்குடியினர் (DNTs) என ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்தனர். இதன்படி, பிப்., 5ல் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயசீலன், தமிழ்நாடு சீர் மரபினர் நலச் சங்க நிர்வாகிகளுடன் சென்று பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனை சந்தித்து கோரிக்கை பற்றி விரிவாக எடுத்துக் கூறினோம். தேர்தலுக்கு முன்னதாகவே நடப்பு கல்வி யாண்டுக்குள் நிறைவேற்றி தர வலியுறுத்தினேன். அமைச்சரும் நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தார்.


இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கும், அமைச்சர் ஆர்எஸ்.ராஜகண்ணப்பனுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் பல ஆண்டாகவே மனம் தளராமல் போராடினர். அவர்களின் போராட்டத்தில் நானும் பங்கேற்றத்தில் மகிழ்ச்சி. எனது அரசியல் பணியில் இந்த அறிவிப்பு ஒரு மைல்கல் என்றாலும், மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது தான் அரசியல் இயக்கங்களின் முதல் பணி. இயற்கையை காக்கும் பணியோடு, மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் பணிகளையும் தொடர்ந்து செய்வேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.