மதுரை ரயில்நிலையத்தில் பசியால் அழுத 3 மாத பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பசியாற்றிய பெண் பயணியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

நேற்று அதிகாலை சென்னையிலிருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸில் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் 3 மாத கைக்குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறியுள்ளார். நீண்டநேரமாக அக்குழந்தை அழுவதைப் பார்த்த சக பயணிகள், குழந்தை கடத்தும் நபரோ என அந்த நபரை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கினர்.
மதுரை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் அந்த நபர் இறங்கியவுடன், சந்தேகத்தில் அவரைப் பின்தொடர்ந்த பயணிகள், இது குறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் தெரிவிக்க, உடனே காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் குழந்தையைத் தூக்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மனைவிக்கு தகவல் கொடுத்து குழந்தையை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறை மேற்கொண்டது.
அந்த நேரம், அக்குழந்தை பசியால் விடாமல் அழதுகொண்டிருக்க பால் புட்டி மூலமாக பால் கொடுத்தபோதும் பால் அருந்தவில்லை. ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த குழந்தைகளுடன் இருந்த பெண்களிடம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உதவ முடியுமா எனக் கேட்டதத்கு பல பெண்கள் கண்டுகொள்ளவில்லை.

அந்த நேரம், கோயம்புத்தூர் செல்வதற்காக ரயில் நிலையம் வந்த பெண், இச்சூழலை புரிந்துகொண்டு குழந்தைக்கு பால்கொடுக்க முன் வந்தார். கோயம்புத்தூர் செல்லும் ரயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலையிலும் குழந்தையின் அழுகையை உணர்ந்து அந்த பச்சிளங்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துப் பசியாற்ற அழுகையை நிறுத்தியது குழந்தை. எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள். கருணையோடு தாய்ப்பால் ஊட்டிய அந்தப் பெண் பயணிக்கு மற்ற பயணிகளும், ரயில்வே காவல்துறையினரும் மகிழ்ச்சியுடன் இனிப்புகளை வழங்கி பாராட்டி வழியனுப்பி வைத்தனர். அதன் பின் கிளம்பி வந்த தாயிடம் குழந்தையை ஒப்படைத்து, அவருக்கும் அவர் கணவருக்கும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
மனிதமும், கருணையும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.