மதுரை: தேர்தல் பிரச்சாரத்துக்கு அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், அடிக்கடி தாமதமாக வருவதால் கட்சி நிர்வாகிகள் கண்டிக்கவும், தட்டிக் கேட்கவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இந்த முறை போட்டியிடுவதற்கு கட்சி மேலிடம் கூறிய தேர்தல் செலவு உள்ளிட்ட பல நிபந்தனைகள் கட்டுப்படியாகாததால் போட்டியிடமுக்கிய நிர்வாகிகள் முன்வரவில்லை. சட்டசபை தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி கொண்டனர்.
ஆனால், கட்சிமேலிடம் கூறிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டு போட்டியிட ஆர்வமாக இருந்ததால் மருத்துவர் சரவணன் கட்சியில் சேர்ந்த ஒரு ஆண்டிலே, மதுரை மக்களவைத்தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அடிப்படையில் மருத்துவர் சரவணன், முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் ஆதரவாளர்.
முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் சிபாரிசால் கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர்க்கப்பட்டார். அதனால், மருத்துவர் சரவணனை வேட்பாளராக்க, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விவி.ராஜன் செல்லப்பா இருவரும் பெரியளவிற்கு விருப்பமில்லாவிட்டாலும் செலவு செய்து தேர்தலில் போட்டியிடுவதற்கு மற்றவர்கள் முன் வராததால் வேறு வழியின்றி இவரை மதுரை வேட்பாளராக்க ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், வேட்பாளர் சரணவனுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் தற்போது வரை ஒட்டவே இல்லை. அதிமுக சார்பில் போட்டியிடுவதால் கட்சிக்காக தேர்தல் பணியை பார்த்து வருகிறார்கள். அதனால், ஆரம்பத்தில் மதுரை தொகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரம் மந்தமாக இருந்தது. மதுரை வந்த பொதுச்செயலாளர் பழனிசாமி, சரவணனை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டார்.
அவருக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் எச்சரித்தார். ஆனால், மருத்துவர் சரவணன், தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், “சரவணனை வெற்றிப்பெற வைக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா போன்றோர் மனகசப்புகளையும், அதிருப்திகளையும் மறந்து தேர்தல் களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதனால், தற்போது திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் களத்தில் சிரமப்பட ஆரம்பித்துள்ளனர். திமுக உட்கட்சிப்பூசல், மதுரைக்கான வேலைவாய்ப்பு, திட்டங்களை கொண்டு வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பெரிய முயற்சி எடுக்காததும், திமுக இங்கு போட்டியிடாததும் அதிமுகவுக்கு பலமாக உள்ளது. ஆனால், மருத்துவர் சரவணன் பிரச்சாரத்திற்கு ஈடுபாட்டுடன் வராதது, தாதமாக பிரச்சாரத்திற்கு வருவது போன்றவை கட்சித்தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.
செல்லூர் பிரச்சாரத்திற்கு கூட முன்கூட்டியே அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வந்து காத்திருந்தார். ஆனால், முன்கூட்டியே வர வேண்டிய சரவணன், தாதமாக வந்தார். அதுபோல், வேட்பாளராக முதல் முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு மாநகர, கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கும் வேட்பாளர் சரவணன் தாமதமாக வந்தார். இதை அவர் திருத்திக்கொண்டால் கட்சித்தொண்டர்களும், நிர்வாகிகளும் இன்னும் உற்சாக தேர்தல் பணியாற்றுவார்கள்” என்றனர்