சென்னை: தேர்தல் பணியாளர்கள், காவல்துறையினருக்கு தேர்தலின்போது படித்தொகை வழங்குவதற்கு ரூ.82.30 கோடி ஒதுக்கி தேர்தல் துறை மற்றும் உள்துறை சார்பில் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஏப்.19-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தல் பணிக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், காவல்துறை, ஊர்க்காவல் படையினர் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு பயிற்சிக்காலம், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், வாக்குப்பதிவு நாளில் எவ்வளவு படித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களை தமிழக தேர்தல் துறை மற்றும் உள்துறை வெளியிட்டுள்ளதுடன், அதற்காக ரூ.82.30 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இதில், பணியாளர்களுக்கான படியாக ஒதுக்கப்பட்ட தொகை வாக்குப்பதிவு முடிந்தவுடன் விடுவிக்கப்படும்.
தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை, தலைமை வாக்குப்பதிவு அதிகாரிக்கு ரூ.1,700, 3 நிலைகளில் உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தலா ரூ.1,300, அலுவலக உதவியாளர் – ரூ.700, வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர் – ரூ.850, வாக்கு எண்ணிக்கை உதவியாளர் – ரூ.650, அலுவலக உதவியாளர் – ரூ.350, நுண் பார்வையாளர் (வாக்குப்பதிவு) – ரூ.1000, நுண் பார்வையாளர் (எண்ணிக்கை) – ரூ.450, மண்டல அலுவலர் – ரூ.1,500, உதவி மண்டல அலுவலர் – ரூ.1,000, வரவேற்பு அலுவலர், காசாளர், விஏஓ, பயிற்சியளிப்பவர் – ரூ.800, கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர், இதர பணியாளர்களுக்கு – ரூ.700 என படி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு ரூ.49.62 கோடி,வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு ரூ.1.31 கோடி, இதர பணியாளர்களுக்கு ரூ.7.64 கோடி எனரூ.58.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிக முன்பண அடிப்படையில், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேவைப்படும் நிதியை பெற்று வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், உள்துறை சார்பில், தேர்தல் பணியில் ஈடுபடும் 1,34,353காவல்துறை, துணை ராணுவப்படையினருக்கு ரூ.23.72 கோடி நிதிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில்உள்ளூர், ஆயுதப்படை, சிறப்புகாவல்படை, சிறப்புப் பிரிவு ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.450, தலைமை காவலர் முதல் காவலர் வரைரூ.375, பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு ரூ.450 வீதம் 5 நாட்களுக்கு வழங்கப்படும். தீயணைப்புவீரர்கள், சிறைத்துறை வார்டன்களுக்கு தினசரி ரூ.375 வீதம் 4 நாட்களுக்கும், துணை ராணுவப் படையினருக்கு தலா ரூ.200 வீதம் 4 நாட்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.