ஊழியர்களை துன்புறுத்திய வழக்கு; இந்துஜா குடும்ப உறுப்பினர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை

ஜெனீவா,

இங்கிலாந்தில் உள்ள பணக்கார குடும்பம் என்ற பெருமையை பெற்றது இந்துஜா குடும்பம். இவர்களுடைய குடியிருப்பு ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சிலர் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்களை அவர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, மனித கடத்தலிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபற்றிய வழக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள கோர்ட்டு ஒன்றில் விசாரணைக்கு வந்தது.

ஊழியர்களுக்கு சொற்ப அளவிலான ஊதியம் அளித்ததுடன், அவர்கள் வீட்டை விட்டு சுதந்திரத்துடன் வெளியே சென்று வருவதற்கும் அனுமதி மறுத்துள்ளனர் என வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

அவர்கள் சொந்த நாடான இந்தியாவில் இருந்து வேலைக்கு வேண்டிய ஆட்களை தேர்வு செய்து சுவிட்சர்லாந்துக்கு அழைத்து செல்கிறார்கள். இதன்பின்பு, ஊழியர்களுடைய பாஸ்போர்ட்டுகள் முடக்கப்படுகின்றன என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.20,800-ல் இருந்து ரூ.37,600 வரை சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்நாட்டில் இதனை விட அவர்கள் அதிக சம்பளம் வாங்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இந்துஜா குடும்பத்தினர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். அவர்கள் மீது குற்றச்சாட்டு தெரிவித்த 3 ஊழியர்களிடம் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள இந்துஜா குடும்பம் முயன்றுள்ளது. எனினும், வழக்கின் தீவிர தன்மையை கவனத்தில் கொண்டு விசாரணை தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் தொடக்கத்தில் இருந்து பிரகாஷ் மற்றும் கமல் இந்துஜா ஆகிய இருவரும் சுகாதார காரணங்களுக்காக விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. அவர்கள் முறையே 78 மற்றும் 75 வயது உடையவர்கள்.

இந்த வழக்கில், பிரகாஷ் மற்றும் கமல் ஆகிய 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களும், அவர்களுடைய மகன் அஜய் மற்றும் அவரின் மனைவி நம்ரதா ஆகியோருக்கு 4 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோரட்டு தீர்ப்பளித்து உள்ளது.

இந்துஜா குழுமம் 38 நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் சுகாதார நலன் உள்ளிட்ட துறைகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. 2 லட்சம் பேர் அவர்களிடம் பணியாளர்களாக உள்ளனர். மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து இந்துஜா குடும்ப உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டபோதும், ஊழியர்களை துன்புறுத்திய வழக்கில் அவர்கள் 4 பேருக்கும் 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.