கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல அனுமதி – எல்.முருகன் நன்றி

சென்னை: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1.5 கோடி என்ற அளவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இதேபோல் தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக எனக்கும் அண்மையில் கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதனையடுத்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு 22.04.2025 அன்று கடிதம் எழுதி இருந்தேன். அதில் கல்லிக்டைக்குறிச்சி ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் பற்றியும் நகருக்கு மிக அருகாமையில் இருப்பதால் பயணிகள் வந்து செல்ல ஏதுவாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருந்தேன். ஏராளமான ரயில் பயணிகள் தினந்தோறும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கும் பயணப்பட்டு வருவதையும், சுற்றுப்பகுதி கிராம மக்களின் மிக முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இந்த ரயில் நிலையம் இருப்பதாலும் பாலருவி ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் வேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவித்து இருந்தேன்.

இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலை கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல உடனடியாக ஆணை பிறப்பித்துள்ளார். இதற்காக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது சார்பிலும் கல்லிடைக்குறிச்சி மக்கள் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.