‘உலகத்தின் ஆக்கும் சக்திகள் தொழிலாளர்கள் தான்’ – ராமதாஸ், அன்புமணி மே தின வாழ்த்து!

சென்னை: மே தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ்: உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில், பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவிலும் அதே நாளில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், முதல் கொண்டாட்டம் சென்னையில் நடந்தது என்பதும் வரலாறு.

இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் உழைக்கும் மக்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி தொழிலாளர்கள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். உழைக்கும் மக்கள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. இதற்கு காரணமான தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஆனால், உழைக்கும் மக்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பது தான் உண்மை. அரசுத் துறைகளில் நிலையான பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக ஒழிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையிலும், குத்தகை அடிப்படையிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.

ஒவ்வொரு நாளும் மே முதல் நாளில் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, போராடிப் பெற்ற தொழிலாளர்களின் உரிமைகளை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பது தான். இதை மனதில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அதை உறுதி செய்வதற்காக போராடுவதற்கு இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

அன்புமணி ராமதாஸ்: உலகத்தை உயர்த்துவதற்காக உழைப்பவர்களை போற்றும் மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.

உலகம் வளர, வளர உழைப்பாளர்களும் வளர வேண்டும் என்பது தான் இயற்கை நியதி. ஆனால், களச்சூழல் அத்தகையதாக இல்லை. உலகம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது; பெரு நிறுவனங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் நிலை மட்டும் மாறவில்லை.

அவர்கள் இன்னும் சுரண்டப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர். இன்னும் கேட்டால் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டியத் தேவை 19 ஆம் நூற்றாண்டில் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிகத் தேவை இன்றைக்கு இருக்கிறது. உலகம் பல்வேறு தளைகளிலிருந்து விடுதலை பெற்று வரும் நிலையில் தொழிலாளர்களின் விலங்கு மட்டும் உடையவில்லை.

உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்குவது தான் உண்மையான சமூகநீதியாகும். நாட்டின் வளர்ச்சியாக இருந்தாலும், நிறுவனங்களின் வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு அடித்தளமாக திகழ்பவர்கள் தொழிலாளர்கள் தான். அவர்கள் வலிமையாக இல்லாவிட்டால், அவர்களை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட எந்த சாம்ராஜ்யமும் சரிந்து விடும்.

இதை உணர்ந்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயமான ஊதியம், விடுமுறை, 8 மணி நேர பணிக்காலம், ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புகள் என அனைத்தும் வழங்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் 136 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்பட்டது போன்ற போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க தொழிலாளர்கள் அனைவரும் தயாராவோம் என்று கூறி, மீண்டும் ஒரு முறை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.