சான்டியாகோ: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி மற்றும் அர்ஜென்டினாவின் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.4 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், சுனாமி அச்சமும் நிலவியது.
இந்த நிலநடுக்கம் சீலேவின் தென் கடலோர பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. இதையடுத்து, மாகெல்லன் ஜலசந்தியின் முழு கடலோரப் பகுதியில் உள்ளவர்களும் விரைந்து வெளியேற வேண்டும் என மக்களுக்கு சிலி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், சுனாமி அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதியில் யாரும் இருக்க வேண்டாம் என சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மையம் கூறியுள்ளது.
இருப்பினும் அர்ஜென்டினா தரப்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு அல்லது உயிரிழப்பு அசம்பாவிதம் ஏதும் இதுவரை பதிவானதாக தகவல் இல்லை. கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவுக்கும் இடையிலான கடற்பகுதியான டிரேக் பேசேஜில் (அட்லாண்டிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியையும் பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கு பகுதியையும் இணைக்கிறது இந்த டிரேக் பேசேஜ்) 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மாகெல்லன் பகுதி சிலியின் தென் கடைக்கோடியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 2017 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சுமார் 1.66 லட்சம் மக்கள் வசித்து வருவதாக தகவல். அர்ஜென்டினாவில் உஷுவாயா நகரத்தில் கடந்த சில மணி நேரங்களாக பீகல் கால்வாயில் நீர் சார்ந்த அனைத்துவிதமான நடவடிக்கையும் அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர். இந்த நகருக்கு தெற்கே 219 கிலோ மீட்டர் தொலைவில் உல்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘பாதுகாப்பு கருதி மாகெல்லன் கடற்கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். இந்த நேரத்தில் அதிகாரிகளின் பேச்சை கேட்க வேண்டியது அவசியமானது. சிலி அரசு எல்லா வகையிலும் தயாராக உள்ளது’ என சிலி அதிபர் கேப்ரியல் போரிக் கூறியுள்ளார்.