“பலரும் இரவு தூக்கத்தை இழப்பர்!” – பினராயி, சசி தரூர் மேடையில் பிரதமர் மோடி கிண்டல்

திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழா மேடைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வந்திருந்ததை சுட்டிக்காட்டி ‘பலர் இரவுத் தூக்கத்தை இழப்பார்கள்’ என்று இண்டியா கூட்டணியை கேலி செய்தார்.

கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் முதல்வரிடம் (பினராயி விஜயன்) ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இண்டியா கூட்டணியின் முக்கியமான தூண். சசி தரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரலாம்” என்றார்.

பிரதமர் மோடியின் கருத்தை சரியாக வெளிப்படுத்துவதற்கு, அவரின் பேச்சை மொழிபெயர்த்தவர் சிரமப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “செய்தி… செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டது” என்றார்.

முன்னதாக, இன்று காலையில் கேரளாவுக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற எம்.பி. சசிதரூர், பிரதமரை வரவேற்கும் குழுவில் இடம்பெறுவதற்கு சரியான நேரத்தில் தான் வந்து விட்டதாக தெரிவித்திருந்தார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “செயல்படாத டெல்லி விமான நிலையத்தில் தாமதங்கள் இருந்த போதிலும், சரியான நேரத்தில் தரையிறங்கி பிரதமர் மோடியை வரவேற்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

காங். பதிலடி: பிரதமரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர், “எந்த அடிப்படையில் பிரதமர் அவ்வாறு கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கப்போவது பிரதமர்தான். இண்டியா கூட்டணியோ, ராகுல் காந்தியோ, காங்கிரஸோ இல்லை. நாங்கள் நிம்மதியாக உறங்குவோம். ஆனால், பிரதமருக்கு இனி அது கடினமாக இருக்கலாம். சாதிவாரி கணக்கெடுப்பில் நாங்கள் அவருக்கு உட்சபட்ச அழுத்தம் கொடுக்க இருக்கிறோம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைப் போல இதையும் அவர்கள் அறிவித்து விட்டார்கள்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.