சம்மர் ட்ரிப் செல்வதெனத் திட்டமிட்டிருக்கிறீர்களா? எங்கே செல்வது, எப்படிச் செல்வது, எத்தனை நாள் பயணம்? என்றெல்லாம் யோசிக்கும்போதே அந்தப் பயணம் ஆரோக்கியமானதாகவும் அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.

வெயிலின் தாக்கத்தைத் தணிக்க, கண்ணில் தென்படும் இளநீர், ஜூஸ், ஐஸ்க்ரீம் என எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிடுவீர்கள். ஆனால், இவை எல்லாவற்றையும்விட தண்ணீர் முக்கியம். உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைப்பதில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. எனவே கைகளில் எப்போதும் இருக்கட்டும் தண்ணீர்.
கிடைத்த உணவுகளைச் சாப்பிட்டுக்கொள்ளலாம் என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். பிஸ்கட் பாக்கெட்டுகள், ஜீரணத்துக்கு உதவும் வெந்தயம், சீரகம் போன்றவற்றைப் பயணங்களின்போது கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
பயணங்களின்போது உலர்ந்த திராட்சை, பாதாம் போன்ற உலர்பழங்களை எடுத்துச் செல்வது நல்லது.

போகும் இடங்களில் சந்தையும் கடைகளும் இருக்கும் இடங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகள், பழங்கள் என அவ்வப்போது ஆரோக்கிய வேட்டையில் ஈடுபடலாம்.
பயணங்களின்போது அலைச்சல் காரணமாகச் சோர்வு ஏற்படும். சோர்வை விரட்டி உற்சாகமாக இருக்க, கொஞ்சம் உடற்பயிற்சி தேவைப்படும். வழக்கமாகச் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாத சூழலும் ஏற்படும். அதற்காக வருத்தப்பட வேண்டாம். பயணம் என்னும்போது கண்டிப்பாக `வாக்கிங்’ இருக்கும். வாய்ப்பிருந்தால் `ஸ்விம்மிங்’ செய்வதும் சோர்வு ஏற்படாமல் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

நீங்கள் தங்கும் ஹோட்டல் அறையில் மினி கிச்சன் இருந்தால் கூடுதல் சிறப்பு. இல்லையென்றால் கையோடு ஒரு சின்ன ‘கெட்டில்’ வைத்துக்கொள்ளலாம். உள்ளூர்ச் சந்தையில் வாங்கும் காய்கறிகளை வைத்து சூப் செய்து `மிட்நைட்’ பசியைப் போக்கிக் கொள்ளலாம். நூடுல்ஸ், ஃப்ரூட் சாலட், காய்கறி சாலட் என மினி பிரேக்ஃபாஸ்ட்டைக்கூட நம் கைவண்ணத்தில் செய்து ருசிக்கலாம்.
ஸ்டார் ஹோட்டலோ, தள்ளுவண்டிக் கடையோ அந்தப் பகுதிகளில் ஸ்பெஷலான ஆரோக்கியமான உணவுகள் என்னென்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவற்றின் ஆரோக்கியப் பலன்களை அறிந்துகொள்வதுடன் செய்முறைகளையும் கேட்டுக்கொண்டு ஊருக்குத் திரும்பியதும் அடிக்கடி செய்து உண்ணலாம்.

விடுமுறையும் பயணமும் கொண்டாட்டமான விஷயங்கள்தான். ஆனாலும் மகிழ்ச்சியான பயணம் அமைய ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஆரோக்கியத்துக்கான பழக்கங்களை எப்போதும் பின்பற்றுங்கள்.