புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்களது எக்ஸ் தள கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலை தொடர்ந்து பிரபல பாகிஸ்தான் நடிகர்கள் மகிரா கான், ஹனியா ஆமிர், சனம் சயீத், அலி ஜாபர் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒருவர் இந்த நடிகர்களின் பக்கங்களை அணுக முயன்றால், மத்திய அரசின் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது. பாகிஸ்தான் நடிகர்களான பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், அயேசா கான், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விபிஎன் மூலம் இந்தியர்கள் பாகிஸ்தான் நட்சத்திரங்களின் இன்ஸ்டா கணக்கை அணுக முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கெனவே பாகிஸ்தான் நாட்டின் 16 யூடியூப் சேனல்களை இந்தியா முடக்கி இருந்தது. இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களை இந்த யூடியூப் சேனல்கள் பகிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் நாட்டின் ஊடக நிறுவன யூடியூப் சேனல்களும் அடங்கும். கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் எக்ஸ் தள கணக்கு முடக்கத்தை எதிர்கொண்டுள்ள பிலாவல் பூட்டோ, சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால் அதில் இந்தியர்களின் ரத்தம் பாயும் என சொல்லி இருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.