ஹைதராபாத்: ‘‘பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு. இந்தியாவை ஒருபோதும் அமைதியாக வாழ விடாது. எனவே, அந்நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலை ஒவைசி கடுமையாக கண்டித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவைசி பேசியதாவது: பாகிஸ்தான் ஒரு தோல்வி அடைந்த நாடு. அந்த நாடு இந்தியாவை அமைதியாக வாழவிடாது. எனவே, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து உதவி செய்யும் பாகிஸ்தானை, சர்வதேச பொருளாதார செயல் அதிரடிப் படை அமைப்பில் கிரே பட்டியலில் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானைவிட இந்தியா எப்போதும் வலிமையாகவே இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் தோல்வி அடைந்த நாடு.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இனத்தவர்களுக்குள் அமைதியை ஏற்படுத்த அந்த நாட்டு அரசால் முடியவில்லை. அத்துடன் அண்டை நாடுகளான ஈரான், ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தானால் நட்புறவுடன் இருக்க முடியவில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் கப்பல், விமானம் போன்றவற்றின் சேவைகளுக்கு தடை விதித்து பிரதமர் மோடி சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். எனினும், சர்வதேச அளவில் அந்த நாட்டை ‘கிரே’ பட்டியலில் வைப்பது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவுக்கு எதிராக பேசி வருகிறார். அவர் ஒன்றை நினைவுகூர வேண்டும். கடந்த 1947-ம் ஆண்டு இந்தியாவை பிரிக்க வேண்டும் என்று ஜின்னா கூறியபோது, அவரது பேச்சை புறக்கணித்தவர்கள் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள். அவர்களும் அவர்களது வாரிசுகளும் இந்த மண்ணை விட்டு எங்கும் செல்ல மாட்டார்கள்.இவ்வாறு ஒவைசி கூறினார்.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் சீனாவுடன் சேர்ந்து வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்று வங்கதேச ராணுவ அதிகாரி ஒருவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒவைசி பதிலளிக்கையில், ‘‘நீங்கள் (வங்கதேசம்) ஒரு சுதந்திர நாடாக இருப்பதற்கு இந்தியாவே காரணம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்’’ என்று பதிலளித்தார்.