“இந்திய தாக்குதலில் என் குடும்பத்தினர் 10 பேர் பலி… வருத்தம், விரக்தி இல்லை’ – ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மசூத் அசார்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4 உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார் தெரிவித்துள்ளார்.

மசூத் அசார் வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையில், பஹவான்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபஹான் அல்லா ஜெய்ஷ்-இ-முகம்மது தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுலான மசூத் அசார் கூறுகையில், “இன்றிரவு என் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இந்த மகிழ்ச்சியால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் அப்பாவி குழந்தைகள், எனது மூத்த சகோதரி அவரது மரியாதைக்குரிய கணவர், எனது மருமகன், அவரது மனைவி, எனது அன்பான மருமகள், எனது அருமைச் சகோதரர் ஹுஸைஃபாஹ் மற்றும் அவரது அம்மா. இன்னும் இரண்டு உதவியாளர்கள்.

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அல்லாவின் விருந்தினர்களாகி விட்டனர். வருத்தமும் இல்லை, விரக்தியும் இல்லை. மாறாக, 14 பேர் செல்லும் அந்த மகிழ்ச்சியின் வண்டியில் நானும் இணைந்திருப்பேன் என்று மனம் மீண்டும் மீண்டும் எண்ணுகிறது. அவர்கள் புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர்களை இறைவன் கொல்லவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1994-ம் ஆண்டு இந்திய அரசால் கைது செய்யப்பட்ட மசூத் அசார் ஏர் இந்தியா விமானம் ஐசி 814 கடத்தலுக்கு பின்பாக விடுவிக்கப்பட்டார். 56 வயதான மசூத் அசார் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல், 2016 பதன்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சதிகளின் பின்னணியில் இருக்கிறார். சர்வதேச பயங்கரவாதியான இவர் பாகிஸ்தானில் இருப்பது ஊரறிந்த ரகசியம் என்றாலும், அவரைப் பற்றியத் தகவல் தன்னிடம் இல்லை என்று பாகிதான் பலமுறை மறுத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து தாக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் தனது தாக்குதல்களை திட்டமிட்டது. இந்தத் தாக்குதல் இன்று (மே 7) அதிகாலை 1.05 மணிக்குத் தொடங்கி 1.30 மணிக்குள் நிறைவடைந்தது. 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இவற்றின் மீது தாக்குதல் நடத்த 24 ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில், 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதோடு, 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.