‘மத்திய அரசின் தாராளமய, தனியார்மய கொள்கைகளையே மாநில அரசும் கடைப்பிடிக்கிறது’ – பெ.சண்முகம்

திண்டுக்கல்: “மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மா.கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (மே 9) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மே 20-ம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தத்தில் திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. தமிழக மக்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு பேராதரவை அளிக்க வேண்டும்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எங்கள் கட்சியின் ஆதரவு உண்டு எனத் தெரிவித்துள்ளோம்.

பிரதமர் அனைத்துக் கட்சி கூட்டங்களில் பங்கேற்காதது சரியல்ல. இந்திய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தீவிரவாதம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்று நாடே பேசிக்கொண்டிருக்கும் போது பிரதமர் ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை நடத்தி பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஒரு முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் 250-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மத்திய அரசு போர் ஒத்திகை நடத்துவது போர் பதற்றத்தை உருவாக்கும் முயற்சியாக நாங்கள் பார்க்கிறோம்.

மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கக்கூடிய வகுப்புவாத மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், நாட்டு மக்களிடையே மதச்சார்ப்பின்மை, மக்கள் ஒற்றுமைக்கு ஆதரவாகவும் ஜுன் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 10 நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார்மய கொள்கைகளையே தமிழக அரசும் கடைப்பிடிக்கிறது. அதன் விளைவாக நிரந்தர பணியிடங்களுக்கு பணி நியமனம் இல்லாமல் அனைத்து பணியிடங்களுக்கும் ஒப்பந்த முறையிலும், அவுட் சோர்ஸிங் முறையிலும், தொகுப்பு ஊதியம், மதிப்பூதியம் என்ற பெயரிலும் தமிழக அரசு பணியிடங்களில் பணியமர்த்தப்படுகிறது. இதனால் வேலை பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது. அரசின் பணி நியமன அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, ஆர்.சச்சிதானந்தம் எம்.பி, மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.