டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது (நாளை) யு.ஏ.இ-க்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தானுக்கு செல்லும் வங்காளதேச அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்காளதேச அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
இந்நிலையில், வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்புயல் ஷான் டெய்ட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த ஆண்ட்ரே ஆடம்சின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் டெய்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2027 நவம்பர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெய்ட் ஆஸ்திரேலிய அணிக்காக 59 போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக இவர் அதிவேகத்தில் பந்துவீசும் திறமை கொண்டவர். இவரது வருகை வங்காளதேச அணிக்கு பலமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. டெய்ட் முன்பு பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல அணிகளுக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், ஷான் டெய்டின் அனுபவம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, எதிர்காலத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். அவர் (ஷான் டெய்ட்) ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியாவுக்காக நிறைய விளையாடினார்.
சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த ஆண்டு எங்களுக்கு நிறைய டி20 கிரிக்கெட் உள்ளது. மேலும், அவர் நவீன யுகத்தில் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலும், குறிப்பாக டி20 போட்டிகளில் அதிக அனுபவங்களை கொண்டுள்ளார். அவருக்கு இந்த விளையாட்டைப் பற்றிய நல்ல நுண்ணறிவு இருக்கும். அவரது அனுபவம் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம்.
உண்மையில், நீங்கள் தேசிய அணியில் இருக்கும்போது, ஒரு பயிற்சியாளர் விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் சில தொழில்நுட்ப அம்சங்களுக்கு உதவ முடியும். ஆனால், பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே பயிற்றுவிக்க வேண்டும். இருப்பினும், டெய்ட் போன்ற ஒரு பெரிய ஆளுமை உங்களிடம் இருக்கும்போது, விஷயங்கள் எளிதாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.