விழுப்புரம்: “ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என கூறுவது என்னைக் கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம்,” என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உருக்கமாக கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பத்துக்கு மாறாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இது நாளடைவில் கருத்து மோதலாக மாறியது. இதற்கு, பாமக இளைஞரணி தலைவராக தனது மகள் வழி பேரன் முகுந்தனை தன்னிச்சையாக ராமதாஸ் நியமனம் செய்ததே காரணம் என்று கூறப்பட்டது. மேலும், பல்வேறு குடும்ப பிரச்சினைகளும் சூழ்ந்தது. இதனால் கட்சியில் இருவருக்குமான பனிப்போர் தீவிரமடைந்தது.
இதன் உச்சமாக, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, செயல் தலைவராக இருப்பார் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்த ராமதாஸ், அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்கிறேன் என்றார். இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அன்புமணி, என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை, பொதுக்குழு மூலமாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார். அன்புமணிக்கு ஆதரவாக மாநில பொருளாளர் திலகபாமா குரல் கொடுக்க, அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன்.
பின்னர் இருவரையும் அழைத்து அன்புமணி அறிவுரை வழங்கினார். இதனால் தந்தை, மகன் இடையே இருந்த மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருவரும், மாமல்லபுரத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் கவனம் செலுத்தினர். தொண்டர்களும் நிம்மதி என பெருமூச்சு விட்டிருந்த நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தது, பாமகவில் மீண்டும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று (மே 16) நடைபெற்ற பாமக மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் அன்புமணியும், அவரது ஆதரவாளர்கள் 80 சதவீதம் பேர் புறக்கணித்து, ராமதாஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். அதேநேரத்தில் ஏற்கெனவே விடுத்த அழைப்பில் இருந்து பின்வாங்க போவதில்லை என்ற உறுதியுடன் இருக்கும் ராமதாஸ், தைலாபுரத்தில் மகளிரணி, மாணவரணி, இளைஞரணியின் மாநில நிர்வாகிகளை மட்டும் வரவழைத்து இன்று (மே 17) சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில், 21 பேரில் 17 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
மாவட்ட அளவிலான நிர்வாகிகளையும் அழைத்துவிட்டு, மீண்டும் பின்னடைவை சந்திக்க விருப்பாமல், முன்னெச்சரிக்கையாக மாநில நிர்வாகிகளுக்கு மட்டும் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது முகுந்தனுடன் அவரது ஆதரவாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தைலாபுரத்தில் 2-வது நாள் நடைபெற்ற கூட்டத்தையும் அன்புமணி, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மயிலம் சிவக்குமார், தருமபுரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.
அதேநேரத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கூட்டத்தில் பங்கேற்க வந்த ஜி.கே.மணி கூறியது: “தமிழகத்தில் பாமக, வன்னியர் சங்கம் ஆகியவை வலிமையான அமைப்பு. இந்த வலிமையை, மாமல்லபுரம் மாநாடு நிரூப்பித்து காண்பித்துள்ளது. அரசியல் கட்சிகளில் உட்கட்சி சலசலப்பு, நெருக்கடி வருவது இயல்புதான். அப்படிதான் பாமகவில் ஒரு நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. இதனை நான் மறைத்து பேச விரும்பவில்லை.
பாமக என்பது குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாகும். குடும்ப பாசம் உள்ள கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, விரைவாக சுமுக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ராமதாசுடன் நேற்று (மே 16) இரவு வரை பேசினேன். இதேபோல் அன்புமணியுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். சுமுகமான தீர்வு மிக விரைவில் வர வேண்டும். பாமக வலிமையை மேலும் அதிகரிக்க வேண்டும். வலிமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம், ஆசையும் கூட.
இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளேன். தேர்தல் வர உள்ளது. இருவரும் ஒன்றாக சந்திப்பார்கள், பேசுவார்கள். உட்கட்சி பிரச்சினையை பொதுவெளியில் பேசக்கூடாது.

ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என்று கூறுவது, என்னை கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம். ஓர் உயிருக்கும் கெடுதல் நினைக்காதவன். பாமகவில் 45 ஆண்டுகளாக உள்ளேன். ஜி.கே.மணி தவறு செய்வானா என உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில், எனக்கு என்னென்ன வாய்ப்புகள் வந்தது என சொல்லக் கூடாது. இதையெல்லாம் விட்டுவிட்டு, பாமகவில் ஏன் இருக்கின்றேன் என எல்லோருக்கும் தெரியும்.
ஜி.கே.மணியை பொறுத்தவரை உண்மையாக இருப்பேன், மனசாட்சியுடன் இருப்பேன். தேர்தலில் வெற்றி, தோல்வி வரும் போகும். மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்தது தொடர்பாக பிரச்சினை ஏதும் இல்லை. தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே இருவரும் சந்தித்து பேசுவார்கள் என்பதை உறுதியாக சொல்கிறேன். நல்ல கூட்டணி அமைப்பார்கள். பாமக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெறும் என்ற பழைய நிலைமையை பாமக உருவாக்கி காட்டும். வலிமையான அதிகாரத்துக்கு செல்வதற்காக பாடுபடுகிறோம்” என்று அவர் கூறினார்.