ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை தேவையுள்ள நோயாளிகளுக்காக மேலும் விரிவுப்படுத்த அர்ப்பணிப்போம்
– ஜனாதிபதியின் செயலாளர்
மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு இன்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்படி விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதிய செயல்பாடுகள் குறித்த நடைமுறை அறிவை மேலும் வழங்குவதற்காக இந்த சிறப்பு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பாடல்களை எவ்வாறு கட்டியெழுப்புவது மற்றும் அதனை பேணுவது என்பது குறித்து ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார விளக்கமளித்தார்.
மேலும், கணினி கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு, மருத்துவ உதவி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து அனுமதிப்பது வரையிலான செயல்முறை குறித்த விளக்கக்காட்சி, ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் பொறுப்பான ஜனாதிபதி நிதிய, அதிகாரிகள் உட்பட பணிக்குழுவினரால் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் செயல்பாடுகளையும் கணினி கட்டமைப்புடன் சரிபார்த்தல், அனுமதிக்கு பின்னர் மருத்துவ உதவிகளை வழங்குதல் செயல்முறை மற்றும் கணினி கட்டமைப்பில் பணிபுரியும் போது விடயத்திற்குப் பொறுப்பான அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நடைமுறை மற்றும் ஒழுங்குமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டன.
மிகவும் தேவையுள்ளவர்களுக்கு சேவைகளை வழங்குவதே ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கம் மற்றும் எண்ணக்கருவாகும் என்றும், தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நிதியத்தின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகமான மக்கள் சேவைகளை எளிதாகப் பெற முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சுட்டிக்காட்டினார்.
இந்த சேவையின் மதிப்பை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் புரிந்துகொண்டுள்ளனர் என நம்புவதாகவும், மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரினதும் ஆதரவு தேவை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து ஆண்டுதோறும் பெறப்படும் பணம், தேவை உள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும், தேவை உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் மேம்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நோயாளிகளால் பிரதேச செயலகங்கள் மூலம் ஜனாதிபதி நிதியத்தின் கணினி கட்டமைப்பில் உள்ளீடு செய்யப்பட்டிருப்பதாகவும். மேலும், இந்த விண்ணப்பங்களில் 40% மேல் மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே சுட்டிக்காட்டினார்.
2025.02.07 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்களுக்கு விரிவு படுத்தும் செயல்பாட்டின் கீழ் தற்போது பெறப்படும் விண்ணப்பங்களில் 80%, பிரதேச செயலகங்கள் மூலமாகவே பெறப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தப் செயலமர்வில் பங்கேற்ற பிரதேச செயலகங்களின், விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களான பீ.எச். கொலம்பகே, பீ.ஆர். பிரசாத் பெரேரா, ஜனாதிபதி நிதியத்தின் தலைமை கணக்காளர் டீ.ஏ.எம். விக்ரமரத்ன, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் உஷானி ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய பணிக்குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்