புதுடெல்லி,
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் நேற்று தெரிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை (மே 16) அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், புற்றுநோய் செல்கள் எலும்புக்கு பரவியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாகவும் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புரோஸ்டேட் புற்றுநோய் பெரும்பாலும் எலும்புகளுக்கு பரவுகிறது என்றும், இதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம் என்றும் கூறப்படுகிறது. ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் அவரது டாக்டர்களுடன் சிகிச்சை விருப்பங்களை மதிப்பாய்வு செய்து வருகின்றனர். என்று பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜோ பைடன் விரைவில் குணமடைய பல்வேறு நாட்டின் உலக தலைவர்கள் தங்கள் ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
நண்பர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்து கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய நாங்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறோம். டாக்டர் ஜில் பைடன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் எங்கள் நினைவுகள் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.