புதுடெல்லி: மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமராக இருந்த சின்சோ அபே ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைத்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் 100 கி.மீ தொலைவுக்கு ரயில்வே இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், 250 கி.மீ தூரத்துக்கு புல்லட் ரயில் பாதை பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் வெளியிட்ட பதிவில், புல்லட் ரயில் இணைப்பு பால பணிகள் 300 கி.மீ தூரத்துக்கு நிறைவடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு பாலங்களை குஜராத்தின் வல்சாத் மற்று நவ்சாரி மாவட்டங்களில் ஓடும் 6 முக்கிய ஆறுகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது. 40 மீட்டர் நீளமுள்ள ரெடிமேட் பாலங்கள் தூண்களில் பொருத்தப்பட்டு இந்த பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒலித் தடை கட்டமைப்புகளும் உள்ளன.
சூரத்தில் புல்லட் ரயில் பாதைகளுக்கான கான்கிரீட் தளம் ஜப்பானின் ஷிங்கனேசன் ரயில் பாதை தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வல்சாத் மாவட்டத்தில் 350 மீ நீளத்துக்கு சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. சூரத்தில் 70 மீட்டர் தூரத்துக்கு இரும்பு ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புல்லட் ரயில் திட்டம் அமலுக்கு வந்தவுடன் மும்பை – அகமதாபாத் இடையேயான ரயில் போக்குவரத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.