இஸ்லாமாபாத்: லஷ்கர்-இ-தொய்பாவின் இணை நிறுவனரும், லஷ்கர் பத்திரிகைகளின் ஆசிரியருமான அமீர் ஹம்சா (66) அவரது வீட்டில் மர்மமான முறையில் படுகாயம் அடைந்து லாகூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹம்சா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை தற்போது ஐஎஸ்ஐ-.யின் பாதுகாப்பின் கீழ் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஷ்கர் இயக்கத்தில் உயர் பதவி வகித்தவரும், அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் முக்கிய பங்கு வகித்தவருமான அபு சைபுல்லா பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர்களால் மூன்று நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், அமீர் ஹம்சாவும் படுகாயம் அடைந்துள்ளது மர்மத்தை அதிகரித்துள்ளது.
லஷ்கர் ஆதரவு டெலிகிராம் சேனல்களில் தீவிரவாத ஆதரவாளர்கள் நேற்று மாலை கூறுகையில், நெருக்கடிகளை சந்திக்கும்போது நமது உறுப்பினர்கள் மனம்தளராமல் உறுதியுடன் இருக்க வேண்டும். இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா நகரத்தைச் சேர்ந்தவர் அமீர் ஹம்சா. இவர், ஆகஸ்ட் 2012 -ல் அமெரிக்காவால் உலகளாவிய தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஹபீஸ் சயீத் மற்றும் அப்துல் ரெஹ்மான் மக்கி ஆகியோருக்கு நெருக்கமானவர் ஹம்சா.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் மீது கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹம்சாவும், சைபுல்லாவும் மூளையாக செயல்பட்டுள்ளனர். அதன்பின்னர், வன்முறை ஜிஹாத்திலிருந்து விலக்கப்பட்ட ஹம்சா, பிரச்சாரா பிரிவின் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
கபிலா தாவத் அவுர் ஷஹாதத் (மதமாற்றம் மற்றும் தியாகத்தின் கேரவன்) , ஷஹ்ரா-இ-பஹிஷ்த் (சொர்க்கத்திற்கான பாதை) போன்ற புத்தகங்களை ஹம்சா எழுதியுள்ளதாக லஷ்கர் அமைப்பின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.