‘பாக். ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்’ – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்

நெதர்லாந்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்சங்கர், “பஹல்காமில் நடந்த தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்துக்கள் என உறுதிப்படுத்திய பிறகே அந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

26 பேரின் மத நம்பிக்கையை உறுதிப்படுத்திய பிறகு, அவர்களது குடும்பங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தின் சுற்றுலாவுக்கு தீங்கு விளைவிப்பதற்காகவும், வேண்டுமென்றே மத முரண்பாட்டை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தலைமை, குறிப்பாக அதன் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்.” என்று அவர் கூறினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் தற்போது நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதியும், தற்போதைய ஃபீல்ட் மார்ஷலுமான அசிம் முனீர் ஏப்ரல் 16 அன்று இஸ்லாமாபாத்தில் நடந்த வெளிநாட்டு பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, “காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு, நாங்கள் அதை மறக்க மாட்டோம். நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதை மறந்துவிடாதபடி, பாகிஸ்தான் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு கதைகளை சொல்லவேண்டும்

நமது முன்னோர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு சாத்தியமான அம்சத்திலும் நாம் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்று நினைத்தார்கள் என்பதை மறந்துவிடாதபடி, உங்கள் குழந்தைகளுக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல வேண்டும். நமது மதங்கள் வேறு, நமது பழக்கவழக்கங்கள் வேறு, நமது மரபுகள் வேறு, நமது எண்ணங்கள் வேறு, நமது லட்சியங்கள் வேறு. அதுதான் இங்கு அமைக்கப்பட்ட இரு தேசக் கோட்பாட்டின் அடித்தளம். நாம் இரு தேசங்கள், நாம் ஒரு தேசம் அல்ல” என்று பேசியிருந்தார்.

அசிம் முனீரின் உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில்தான், பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தையும், பாகிஸ்தான் ராணுவத் தலைவரின் மதக் கண்ணோட்டத்தையும் தொடர்புபடுத்தி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.