புதுடெல்லி: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன.
கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் புதிய கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும் இவைகள் தீவிரத் தன்மையற்ற, பாதிப்பு குறைவானவையே. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தெற்காசியாவில் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் துணை திரிபு) பரவல் காரணமாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு இப்போது அதிகரித்து வந்தாலும் இதனை கவலைக்குறிய மாறுபாடு என்று உலக சுகாதார நிறுவனம் இன்னும் வகைப்படுத்தவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கரோனா பாதிப்பின் அறிகுறிகள் மிகவும் லேசானவை. பாதிக்கப்பட்டவர்கள் நான்கு நாட்களில் குணமடைந்து விடுகிறார்கள். இதன் பொதுவான அறிகுறிகளாக, காய்ச்சல், ஜலதோசம், தொண்டை வலி, தலைவலி, சோர்வு போன்றவை இருக்கின்றன.
இந்தப்பின்னணியில் டெல்லியில் 23 கரோனா பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதனால், படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், பரிசோதனை கருவிகள், தடுப்பூசிகளை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைத்திருக்கும்படி, டெல்லி பாஜக அரசு அறிவுறுத்தியுள்ளது.
“தற்போதைய கரோனா வைரஸ் பாதிப்பு பொதுவான காய்ச்சல் போன்றது தான், அதனால் பொதுமக்கள் பதற்றப்பட வேண்டாம்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ் சிங் தெரிவித்துள்ளார். அதேபோல், நொய்டா, காசியாபாத் போன்ற தேசிய தலைநகர் பகுதிதளிலும் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் மே மாதத்தில் 273 கரோனா பதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் கண்காணிப்பினை அதிகரிக்கும்படி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருமல் அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணியும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் கரோனா பாதிப்பு சற்றே அதிகரித்துள்ளது. அங்கு 34 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 மாத கைகுழந்தையும் அடக்கம்.
மகாராஷ்டிராவில் மும்பையில் 16 மே மாதத்தில் 16 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மும்பையில் தான் அதிகமான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும், மருத்துவனையில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
SARI அறிகுறி உள்ள அனைத்து நோயாளிகளும் கரோனா சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று பிஎம்பி அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கடந்த மூன்று நாட்களில் புனேவில் 10 பேர் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ஆந்திராவில் கரோனா பாதிப்புகள் அதிகரிக்கவில்லை என்றாலும், தடுப்பூசிகள், பிபிஇ கருவிகள் மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதித்த நாடுகள், குறிப்பாக ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.