புதுச்சேரி: “நிதி ஆயோக்கில் பங்கேற்காததுடன் மாநில அந்தஸ்துக்காக முதல்வர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்தை போராடி பெறுவோம். அதுதான் எங்கள் இலக்கு. அதற்காக நீதிமன்றத்தையும் நாடுவோம்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாகவே அவர் கலந்துகொள்ளாமல் உள்ளார்.
கடந்த 2015-ல் இருந்து 2021 வரை நான் முதல்வராக இருந்த போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு மாநில வளர்ச்சிக்கு நிதி வழங்க வேண்டும், நிதி கமிஷனில் புதுவையை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
ஆனால், தற்போதைய முதல்வர் ரங்கசாமி இந்த கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். மாநில அந்தஸ்து தான் உயிர் மூச்சு என பேசி வரும் முதல்வர் ரங்கசாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி இருந்தும் முதல்வரால் மாநில அந்தஸ்தை பெற முடியவில்லை.
2026 தேர்தலுக்குள் மாநில அந்தஸ்து கிடைக்காது என பேரவைத்தலைவர் செல்வம் கூறியுள்ளார். புதுச்சேரி பாஜகவினர் உண்மையில் மோடியை நேசித்தால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமியை கண்டித்து கூட்டணியில் இருந்து வெளியே வருவார்களா? ரங்கசாமி பதவி சுகத்தை அனுபவித்துகொண்டு மக்களை வஞ்சித்து வருகிறார்.
பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கபட நாடகம் ஆடுகின்றனர். இது ஒரு கதம்ப கூட்டணி, கொள்கையில்லாத கூட்டணி. 2026-ல் புதுச்சேரியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்தை போராடி பெறுவோம். அதுதான் எங்கள் இலக்கு. இதற்காக நாங்கள் நீதிமன்றத்தையும் நாடுவோம்.
மாநில வளர்ச்சிக்காக நாங்கள் போராடியபோது வேடிக்கை பார்த்த ரங்கசாமி தற்போது அதிகாரிகள் செயல்படுவதில்லை என்கிறார். எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி – அவருக்கு வந்தால் ரத்தமா?