பாட்னா: பொறுப்பற்ற நடத்தை காரணமாக தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், “தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது. எனது மூத்த மகனின் செயல்பாடுகள் பொறுப்பானதாகவும், எங்கள் குடும்ப விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்றதாகவும் இல்லை. எனவே, நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் ஒதுக்கி வைக்கிறேன். இனிமேல் அவருக்கு கட்சியிலோ அல்லது குடும்பத்திலோ எந்த விதமான பங்கும் இருக்காது. அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்படுகிறார். அவர், தனது சொந்த வாழ்க்கையின் நன்மை தீமைகளை காணும் திறன் கொண்டவர். அவருடன் உறவு வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தேஜ் பிரதாப் தனக்கும், அனுஷ்கா யாதவ்-க்கும் இடையில் இருக்கும் நீண்ட கால உறவு பற்றி முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வெளியான அடுத்த நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது பதிவில் பிரதாப் இருவரும் காதலிப்பதாகவும், கடந்த 12 வருடங்களாக உறவில் இருப்பதாகவும் கூறியிருந்தார். என்றாலும் பின்னர் தனது முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், அதில் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், தனக்கும் குடும்பத்துக்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் திருத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தேஜ் பிரதாப்பின் தம்பியும் லாலுவின் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ், இந்த நடவடிக்கைகள் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை இதையெல்லாம் நான் விரும்பவில்லை அல்லது பொறுத்துக்கொள்ளவில்லை. தனிப்பட்ட வாழ்க்கை என்பது தனியாக இருக்க வேண்டும். அவர் மூத்தவர். சொந்தமாக முடிவெடுக்கும் உரிமை அவருக்குண்டு.
ஆனால் லாலு பிரசாத் யாதவ், தனது முடிவினை ட்வீட் மூலமாக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். தான் சரியென்று நினைத்ததை அவர் செய்துள்ளார். இது பற்றி ஊடகங்கள் மூலமாகவே நான் அறிந்து கொண்டேன்” என்று தெரிவித்தார்.
வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேஜ் பிரதாப் யாதவ், சமஸ்திபூரின் ஹசன்பூர் தொகுதியை விட்டுவிட்டு, வைஷாலி மாவட்டத்தின் மஹூவா தொகுதியில் போட்டியிட தயாராகி வருகிறார். கடந்த 2015- ம் ஆண்டு பிரதாப், மஹூவா தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் அவர் அதே தொகுதிக்கு திரும்புவதற்காக திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.