நகைக் கடன் புதிய விதிகளுக்கு எதிராக மே 30-ல் திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில், வரும் மே 30-ம் தேதி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் விவசாய அணியின் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே மத்திய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. தேசிய வங்கிகளில் சாமானிய மக்களக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது.

சாமானிய மக்களின் வரிப்பணமான பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் பணக்காரர்களுக்கு வழங்கி வருகிறது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு.விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய மற்றும் அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறுஅடமானம் வைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது மத்திய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி, “இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும், தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன் பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது” போன்ற புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்களை வஞ்சித்து வரும் மத்திய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ள நகைக் கடன் நிபந்தனைகள் அனைத்தையும் உடனடியாக கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வருகிற மே 30ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள், கட்சியின் விவசாய அணியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும்,” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.