புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வயிறு தொடர்பான பிரச்சினைக்காக இரைப்பை குடல் நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சோனியா காந்தி கடந்த 9-ம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக இம்மருத்துவமனைக்கு சென்று வந்தார். இதற்கு முன் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் 2 நாட்கள்
சிகிச்சை பெற்றார்.