வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்களில் ஆல் அவுட்

பார்படாஸ்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாசில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் (3 ரன்), கேமரூன் கிரீன் (3 ரன்), ஜோஷ் இங்லிஸ் (5 ரன்) வரிசையாக வீழ்ந்தனர்.

இந்த இக்கட்டான சூழலில் இருந்து அணியை மீட்டெடுக்க உஸ்மான் கவாஜா – டிராவிஸ் ஹெட் ஜோடி போராடியது. சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது. உஸ்மான் கவாஜா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் கடந்த டிராவிஸ் ஹெட் 59 ரன்களில் அவுட்டானார்.

இவர்கள் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலிய அணி மீண்டும் சரிவுக்குள்ளானது. பின்வரிசையில் கம்மின்ஸ் (28 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். முடிவில் 56.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளும், ஷமர் ஜோசப் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியும் தடுமாற்றத்துடனே தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கிரெய்க் பிராத்வெயிட் 4 ரன்களிலும், ஜான் கம்பெல் 7 ரன்களிலும் ஸ்டார்க் பந்துவீச்சில் வீழ்ந்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கீசி கார்டி 20 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோமல் வாரிக்கன் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் அடித்துள்ளது. பிரண்டன் கிங் 23 ரன்களுடனும், ரோஸ்டன் சேஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.