காத்மண்டு,
நேபாளத்தின் பிரதமராக 4வது முறையாக கேபி சர்மா ஒலி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். வழக்கமாக நேபாளத்தின் பிரதமராக பதவியேற்பவர்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற கேபி சர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றார். மேலும், நேபாளம் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சரியான நேரத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வேன் என்று நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேபாள யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த கேபி சர்மா ஒலி கூறுகையில், நான் சரியான நேரத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வேன். இரு தரப்பும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டப்பின் எனது இந்திய பயணம் தொடங்கும்.
இந்திய பிரதமர் மோடி நேபாளத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுத்தேன். பிரதமர் மோடி வரும் நவம்பர் மாதம் நேபாளத்திற்கு வருவார் என எதிர்பார்க்கிறேன். நான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு எதிராக இந்தியா எந்த தீய செயலையும் செய்யவில்லை. நான் பிரதமராவதை இந்தியா விரும்பவில்லை என்பது வதந்தி’ என்றார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.