India vs England 4th Test: இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதும் ஆண்டர்சன் – டெண்டுலகர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று (ஜூலை 23) தொடங்குகிறது.
India vs England 4th Test: வெற்றிக்கு இந்திய அணி போராடும்
முதல் நாளான இன்று, இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு டாஸ் வீசப்படும். அதைத் தொடர்ந்து மதியம் 3.30 மணிக்கு முதல் செஷன் தொடங்கும். மாலை 5.30 மணிக்கு மதிய உணவுக்காக வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம் திரும்புவார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 6.10 மணிக்கு இரண்டாவது செஷன் தொடங்கும். அதன்பின் இரவு 8.10 மணிக்கு தேநீர் இடைவேளை. பின்னர் இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது செஷன் இரவு 10.30 மணிவரை நடக்கும். தேவைப்பட்டால் கூடுதலாக அரைமணி நேரம் அதாவது இரவு 11 மணிவரை மூன்றாவது செஷன் நீட்டிக்கப்படும். தினமும் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.
இதுமட்டுமின்றி, ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 5 நாள்களுக்கும் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றே கூறப்படுகிறது. மழை ஆட்டத்தை சிறிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மழையால் செஷன் டைமிங்கிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை இந்திய அணி (Team India) டெஸ்ட் வரலாற்றில் இங்கு வெற்றி பெற்றதே இல்லை என்பதால் மைதானத்தில் முதல் வெற்றிக்கும், தொடரில் இரண்டாவது வெற்றிக்கும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Team India Playing XI: அஸ்வின் சொல்வது என்ன?
இந்நிலையில், பலரின் கவனமும் தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் மீதுதான் இருக்கிறது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் காயத்தால் தொடரில் இருந்து விலகியதாலும், ஆகாஷ் தீப் காயத்தால் 4வது போட்டியில் இருந்து விலகியதாலும் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் அவரது யூ-ட்யூப் சேனலில் (Ravichandran Ashwin Youtube Channel), இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் குறித்து பிரபல கிரிக்கெட் வல்லுநரான பிரசன்னா அகோரம் (Pdogg) உடன் கலந்துரையாடல் செய்து அதன் வீடியோவை நேற்று (ஜூலை 22) வெளியிட்டிருந்தார்.
Team India Playing XI: ‘குல்தீப் யாதவ் கண்டிப்பாக வேண்டும்’
அதில் இந்திய அணியின் பிளேயிங் காம்பினேஷன் குறித்து அஸ்வின் தனது கருத்தை தெரிவித்திருந்தார். குறிப்பாக, தொடரின் முதல் போட்டியில் இருந்தே இந்திய அணி குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என அஸ்வின் பேசி வந்தார். அதையே இம்முறையும் சொன்னார், ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4வது மற்றும் 5வது நாளில் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) எதிரணிக்கு சிம்மசொப்பனாக இருப்பார் என்பதை வலியுறுத்தினார்.
Team India Playing XI: அன்ஷுல் கம்போஜ் குறித்து அஸ்வின்
அதுமட்டுமின்றி, சக சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் அவர் பேசியிருந்தார். காரணம், ரெட் பால் போட்டிகளில் ஒரே லெந்தில் போடக்கூடியவர் அன்ஷுல் கம்போஜ் என்றும் போட்டியின் திட்டம் என்ன, அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அவரிடம் இருக்கிறது, அதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன் என்றும் அஸ்வின் அவர் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அஸ்வின் கடந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் இருந்தே அன்ஷுல் கம்போஜ் குறித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Team India Playing XI: நம்பர் 3இல் யார்?
அதேபோல் நம்பர் 3 ஸ்பாட்டில் கருண் நாயருக்கு (Karun Nair) அடுத்த 2 போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவர் பேசியிருக்கிறார். அதுதான் கருண் நாயருக்கு செய்யப்படும் நீதியாக இருக்கும் என்றார். சாய் சுதர்சனுக்கு அடுத்த 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து அதில் அவர் சோபிக்கவில்லை என்றால் அது கருண் நாயர், சாய் சுதர்சன் இருவருக்கும் எவ்வித பயனையும் கொடுக்காது என்றும் அதேதான் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் பொருந்தும் என்றும் அவர் பேசியிருந்தார். இதனால் கருண் நாயர்தான் அடுத்த 2 போட்டிகளிலும் நம்பர் 3 இடத்தில் விளையாட வேண்டும் என்றார். ஒருவேளை கருண் நாயரை எடுக்க வேண்டாம் என நினைத்தால் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
Team India Playing XI: இந்த வீரர் விளையாடவே மாட்டார்!
தொடர்ந்து, ரிஷப் பண்ட் காயம் (Rishabh Pant Injury) குறித்து பேசிய அஸ்வின், ‘அவருக்கு (பண்ட்) விரலில் காயம் ஏற்பட்டதே தவிர எலும்பு முறிவு ஏற்படவில்லை. விக்கெட் கீப்பருக்கு மாற்று வீரர் வரலாம் என்ற புதிய விதியை சாதகமாக்கிக் கொண்டு கடந்த போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங் மட்டும் விளையாடினார், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) பார்த்துக்கொண்டார். ஆனால் இந்த போட்டியில் விக்கெட் கீப்பிங்கை ரிஷப் பண்ட் பார்த்துக்கொள்வார், இந்திய அணி இரண்டாவது விக்கெட் கீப்பரை சேர்க்க மாட்டார்கள். எனவே துருவ் ஜூரேல் கண்டிப்பாக இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார்” என உறுதிப்பட தெரிவித்தார்.
Shubman Gill Press Conference: சுப்மான் கில் சொன்னது என்ன?
சுப்மான் கில் (Shubman Gill) நேற்று அளித்த செய்தியாளர்கள் சந்திப்பிலும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கை பார்த்துக்கொள்வார் என உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் கருண் நாயர் பேட்டிங்கில் சிறப்பாக பங்களிப்பதாகவும் கில் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி அன்ஷுல் கம்போஜை பிளேயிங் லெவனில் சேர்ப்பதை ஏறத்தாழ உறுதிசெய்தார். ஆனால், குல்தீப் யாதவ் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதனால் துருவ் ஜூரேல் மட்டுமில்லை குல்தீப் யாதவும் பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பில்லை எனலாம்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் (அஸ்வின் கணிப்பு)
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர்/சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
மேலும் படிக்க | இந்த 10 இந்திய வீரர்களை விட… லியம் டாவ்சன் அதிக சதங்களை அடித்திருக்கிறாராம் – எதில் தெரியுமா?
மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஆப்பு உறுதி… டெஸ்டில் 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு – இதுகளும் சதி பன்னுதே!
மேலும் படிக்க | கருண் நாயரும் வேண்டாம், சாய் சுதர்சனும் வேண்டாம்… இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பா?