இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம்.. FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற 19 வயது திவ்யா தேஷ்முக்

FIDE World Cup Final: ஜார்ஜியாவின் பதுமி என்ற நகரில் FIDE உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், அனுபவம் வாய்ந்த வீராங்கனை கொனேரு ஹம்பி மற்றும் 19 வயது இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் மோதினர். இருவருமே இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால், எப்படி ஆனாலும், ஃபீடே மகளிர் உலகக் கோப்பை இந்தியாவுக்கு தான் என்பது முன்பே உறுதி ஆகிவிட்டது. ஆனால், அனுபவம் வாய்ந்த கொனேரு ஹம்பியை வீழ்த்தி இளம் வயதிலேயே ஃபீடே உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்தார் திவ்யா தேஷ்முக். 

விறுவிறுப்பாக சென்ற இறுதி போட்டி 

இந்த இறுதிப்போட்டி தொடக்கம் முதலே மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கிளாசிக்கல் சுற்றுக்கள் இரண்டுமே டிராவில் முடிவடைந்ததால், போட்டி டைபிரேக்கருக்கு சென்றது. இதிலும் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. இரண்டாவது ஆட்டத்தில்தான் வெற்றியாளர் யார் என்ற முடிவு கிடைத்தது. ஒவ்வொரு நகர்வையும் இருவருமே மிகவும் கவனமுடன் நகர்த்தினர். ஆனால் கொனேரு ஹம்பி செய்த சிறிய தவறு, போட்டியின் போக்கையே மாற்றி அமைத்தது. 

கொனேரு ஹம்பி செய்த தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட திவ்யா தேஷ்முக், ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறி போகவே, கொனேரு ஹம்பி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்தில் இருந்து விலகி சென்றார். இதனால் வெற்றியாளர் திவ்யா தேஷ்முக் என தீர்மானிக்கப்பட்டது. இந்த அபார வெற்றியின் மூலம், திவ்யா தேஷ்முக் இந்திய மகளிர் செஸ்ஸில் ஒரு வரலாற்றை படைத்தார். தனது பெயரை வரலாற்று பக்கத்தில் பதிவு செய்தார். 

19 வயதில் வரலாற்று சாதனை

FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் அவார். அதிலும் 19 வயதிலேயே இப்படியான சாதனையை செய்தது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அதேசமயம் பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திவ்யா தேஷ்முக் உலக கோப்பையை வென்றது மட்டுமல்லாமல் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 

கொனேரு ஹம்பி 

38 வயதான கொனேரு ஹம்பி ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் செஸ் விளையாட்டில் மிகவும் அனுபவம் பெற்றவராக உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கிரண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அனுபவம் வாய்ந்த செஸ் வீராங்கனையை தனது 19 வயதிலேயே வீழ்த்தி செஸ்ஸில் மிகவும் பெரிய பட்டமாக மதிக்கப்படும் ஃபீடே உலகக் கோப்பையை வென்றது திவ்யா தேஷ்முக்-க்கு கூடுதல் பெருமையை சேர்த்துள்ளது.

மேலும் படிங்க: ரிஷப் பண்டுக்கு பதில்… நாராயணன் ஜெகதீசன் தேர்வானது ஏன்? – காரணங்கள் இதோ

மேலும் படிங்க: CSK: சாம் கரனை விடுவித்து.. இந்த 3 பவுலருக்கு குறிவைக்கும் சிஎஸ்கே!

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.