இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதிலிருந்து, அணியின் செயல்பாடுகள் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கம்பீர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவர் வி.வி.எஸ். லட்சுமண் நியமிக்கப்பட உள்ளதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கவுதம் கம்பீர் மாற்றம்?
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றபோது, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது தாயாரின் உடல்நிலையை கவனிப்பதற்காக, தொடரின் பாதியிலேயே இந்தியாவிற்கு திரும்பினார். அதே காலகட்டத்தில், இந்திய அணியின் பயிற்சி முகாமில் வி.வி.எஸ். லட்சுமண் காணப்பட்டார். இதுவே இந்த வதந்தி பரவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. கம்பீர் இல்லாத நேரத்தில் லட்சுமண் அணியுடன் இருந்ததால், அவர்தான் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், டெஸ்ட் அணியின் தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்த பிசிசிஐ, கம்பீரை நீக்கிவிட்டு லட்சுமணை முழுநேர டெஸ்ட் பயிற்சியாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்தன.
இதற்கு முன்பு, ராகுல் டிராவிட்டுக்கு பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு லட்சுமணின் பெயரும் பிசிசிஐயால் பரிசீலிக்கப்பட்டது மற்றும் அவர் கடந்த காலங்களில் தற்காலிக பயிற்சியாளராகப் பணியாற்றிய அனுபவமும் இந்த வதந்திக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இந்த வதந்திகள் குறித்து தற்போது உண்மைகள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. பிசிசிஐ வட்டாரங்கள் அளித்த தகவல்களின்படி, வி.வி.எஸ். லட்சுமண் இந்திய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் வழியில், லட்சுமண் தனது பயணத்தின் ஒரு பகுதியாக லண்டனுக்குச் சென்றுள்ளார். அங்கு இந்திய அணி இருப்பதை அறிந்து, வீரர்களை சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் செலவிட்டுள்ளார். இங்கிலாந்து மண்ணில் விளையாடிய நீண்ட அனுபவம் கொண்டவர் என்ற முறையில், வீரர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கலாம். ஆனால், இது ஒரு தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பிற்குப் பிறகு, அவர் விரைவில் இந்தியாவிற்கு திரும்பிவிடுவார் என்றும், இந்திய அணியுடன் அவருக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வ பொறுப்பும் வழங்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பீரின் நிலை என்ன?
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது தாயாரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தவுடன் விரைவில் மீண்டும் இங்கிலாந்து சென்று அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயிற்சியாளர் மாற்றம் குறித்த பேச்சுக்கே தற்போது இடமில்லை.