Team India Playing XI Prediction: இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டி நாளை (ஜூலை 31) லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்ற போட்டியை டிரா செய்தாலே போதும். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பையை தக்கவைக்க முடியும். இதனால் இந்திய அணி வெற்றிக்கு கடுமையாக போராடும் என எதிர்பார்க்கலாம்.
IND vs ENG: இங்கிலாந்து செய்த 4 மாற்றங்கள்
இங்கிலாந்து அணி (Team England) அதன் பிளேயிங் லெவனை இன்றே அறிவித்துவிட்டனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வலது தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் 5வது போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், ஒல்லி போப் கேப்டன்ஸியை கவனித்துக்கொள்வார். இவருடன் ஜோப்ரா ஆர்ச்சர், லியம் டாவ்சன், பிரைடன் கார்ஸ் நீக்கப்பட்டு ஜேக்கப் பெத்தல், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜாஷ் டங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் பேட்டிங்கும், பந்துவீச்சும் தற்போது சமன் பெற்றிருக்கிறது எனலாம்.
IND vs ENG: சுப்மான் கில் செய்தியாளர்கள் சந்திப்பு
அந்த வகையில், இந்திய அணி (Team India) என்ன பிளேயிங் லெவன் காம்பினேஷனை அமைக்கப் போகிறது என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது. ரிஷப் பண்டுக்கு பதில் துருவ் ஜூரேல் விளையாடுவார் என்பது மட்டும் ஏறத்தாழ உறுதி. ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், அன்ஷூல் கம்போஜ் ஆகியோர் தொடர்வார்களா என்றே கேள்வி பலமாக உள்ளது. இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் இன்று (ஜூலை 30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவன் காம்பினேஷன் குறித்து சில தகவல்களை அளித்துள்ளார்.
IND vs ENG: அர்ஷ்தீப் சிங் ரெடி…?
அதில் அவர் பேசியதாவது, “அர்ஷ்தீப் சிங்கை தயாராக இருக்கும்படி கூறியுள்ளோம். இருப்பினும், இன்று மாலைக்குள் ஆடுகளத்தைப் பார்வையிட்ட பிறகே, பிளேயிங் லெவன் அணி குறித்து முடிவெடுப்போம். இங்கிலாந்து அணி முன்னணி சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவில்லை. ஜேக்கப் பெத்தேல், ஜோ ரூட் அவர்களுக்கு சுழற்பந்துவீச்சு ஆப்ஷன்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் எங்களிடம் உள்ளனர். அவர்கள் இருக்கும்வரையில் வேறு பிரச்னையில்லை…” என்றார்.
IND vs ENG: நம்பர் 8இல் ஏன் பேட்டர்?
மேலும் இந்தியா ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளாமல், நம்பர் 8 வரை பேட்டர்களை அடுக்குவது ஏன் என்ற கேள்விக்கு பதலளித்த கில், “வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் எங்களுக்கு மிகுந்த கட்டுப்பாட்டைக் கொடுக்கிறார். அவரது பேட்டிங் எங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. அவரைப் போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம். அணியை சரிவில் இருந்து அவரால் தடுக்க முடியும். அவர் இருப்பதால் எங்களின் அந்த சிக்கல் தீர்ந்துள்ளது” என்றார்.
IND vs ENG: ஜஸ்பிரித் பும்ரா குறித்த அப்டேட்
ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விக்கு, “பிளேயிங் லெவன் குறித்த முடிவை நாளைக்கு எடுப்போம். ஆடுகளம் அதிகம் புற்களுடன் காணப்படுகிறது. அதனால் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார். சுப்மான் கில்லின் இந்த பேச்சின் மூலம், அர்ஷ்தீப் சிங் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. அதேநேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. இதனால், அன்ஷூல் கம்போஜிற்கு பதில் அர்ஷ்தீப் சிங் உள்ளே வரலாம். மேலும் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் இருப்பதே போதுமானது என சுப்மான் கில் பேசுவதன் மூலம் குல்தீப் யாதவ் கடைசி போட்டியிலும் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
மேலும் படிக்க | Video: கோபத்தின் உச்சத்தில் கௌதம் கம்பீர்… மைதான ஊழியருடன் வாக்குவாதம் – காரணம் என்ன?
மேலும் படிக்க | இந்திய அணி வெற்றியை அடைய… இந்த 4 மாற்றங்களை கண்டிப்பாக செய்யணும்!
மேலும் படிக்க | ரிஷப் பண்டுக்கு பதில்… நாராயணன் ஜெகதீசன் தேர்வானது ஏன்? – காரணங்கள் இதோ